வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து விசிக வழக்கறிஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன், நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டபோது, அவரது கார் ஒரு வழக்கறிஞரின் பைக்கை ஒட்டியதாக கூறப்பட்டது.
இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியதாகவும், திருமாவளவனின் ஆதரவாளர்கள் வழக்கறிஞரை தாக்கியதாகவும் தகவல்கள் பரவின.
இது குறித்து விளக்கம் அளித்த திருமாவளவன் :
“ஒரு வழக்கறிஞர் தனது பைக்கை என் காரின் முன்பு நிறுத்திவிட்டு, காவலர்கள் கேட்டபோதும் ஒதுங்கவில்லை. அவர் ஆணவத்துடன் முறைத்ததால் சிலர் அவரை தட்டித்தட்டினர். நான் எவரிடமும் வன்முறையை தூண்டவில்லை. ‘அடங்க மறு’ என்பதே என் சொல்; அது அரசியல் மொழி, வன்முறை அல்ல,” என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது :
“எடப்பாடி பழனிசாமி காரின் முன் யாராவது பைக் நிறுத்தினால் இப்படி கேள்வி எழுப்புவார்களா? என்ன நடந்தது என்று எனக்கும் சரியாக தெரியவில்லை. அவர் முறைத்ததால் தான் சிலர் அடித்தார்கள். வெறும் சில அடிதான் அடித்தார்கள்; பெரிய விஷயம் இல்லை,” என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டதால், விவகாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.