அதிமுக-பாஜக இடையே இணைப்பு மட்டுமே உள்ளது, பிணைப்பு இல்லை – திருமாவளவன்

மேலவளவுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரை நோக்கி விமானம் மூலம் பயணித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அரசியல் கருத்துகளை வெளியிட்டார்.

மேலவளவு முருகேசன் மற்றும் அவரது தோழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நாளான மேலவளவு வீரவணக்க நாள் குறித்து பேசிய அவர்,

இது சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர நினைவுநாள். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். அந்த கிராமம் மிகவும் பின்தங்கிய நிலைமைக்கு உள்ளதாகவும், மக்களுக்கு வீட்டு மனை பட்டா கூட இல்லாத நிலைதான் என்றும், மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும்,” எனக் கூறினார்.

“விடுதலை சிறுத்தைகளின் கொடிக்கம்பங்களை மட்டுமே அகற்றுகிறார்கள்”

தொடர்ந்து, கொடிக்கம்பங்களை அகற்றும் அரசுத் தீர்வுகள் குறித்து விமர்சித்த அவர்,

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதித்துறை அளித்த தீர்ப்பை பயன்படுத்தி, முதலில் எங்களுடைய கொடிக்கம்பங்களை அகற்ற அதிகாரிகள் முனைவாக செயற்படுகிறார்கள். இது ஜனநாயக படுகொலை, என்றார்.

“அதிமுக பாஜகவுடன் இணைந்து இருப்பது தவிர பிணைப்பு இல்லை”

அதிமுக தலைவரின் அண்மைய கூற்று குறித்து பேசிய திருமாவளவன்,

கூட்டணி ஆட்சி பற்றிய விஷயத்தில் அமித்ஷா மட்டுமே பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி இதுவரை மௌனம் காக்கிறார் என்று முன்பே நான் குறிப்பிட்டேன். இப்போது அவர் கூறிய பதிலில், பாஜகவுக்கு மட்டுமே பதில் அளித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அதிமுக-பாஜக இடையே இணைப்பு இருக்கலாம், ஆனால் பிணைப்பு இல்லை என்பது இதன்மூலம் புலப்படும்,” என்றார்.

அதிமுக கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா? என்ற கேள்விக்கு,

இது யூகமான கேள்வி. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதற்கான நேரத்தில் பதில் அளிக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் மரணம் குறித்து திருமாவளவன்

இது மிகவும் அதிர்ச்சிகரமானது. அவரது தம்பி தாக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். இதைச் சுற்றியுள்ள பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டாலும், இது போதாது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொடர்ந்து கஸ்டோடியல் டெத் நிகழ்வது கவலையளிக்கிறது, என்றார்.

“ராமதாஸ் குறித்து நான் கூறியது பாசம் அல்ல – பொறுப்பான வார்த்தை”

அன்புமணியின் குறிப்பு குறித்து விளக்கம் அளித்த திருமாவளவன்,

நான் குறிப்பிட்டது ‘பாசம்’ என்ற அடிப்படையில் அல்ல. தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான இடைவெளி அதிகமாகாதிருக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னேன். அந்த இடைவெளியை சனாதன பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. அதனால் தான் நான் அந்த வார்த்தையை உபயோகித்தேன், எனத் தெரிவித்தார்.

Exit mobile version