திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சுவாமி சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன – அமைச்சர்கள் தரிசனம்

தூத்துக்குடி :
வரும் ஜூலை 7ஆம் தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் உள்பிரகாரத்தில் யாகசாலை பூஜைகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பூஜைகள் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.

நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் தங்க முலாம் பூசப்பட்ட சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. அதேபோல் மூலவர், வள்ளி, தெய்வானை ஆகியோரின் விமான கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் யாகசாலை முன் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய கடவுள்’ என்ற நூலை வெளியிட்டார். மாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உட்பட 108 ஓதுவார் மூர்த்திகள் தமிழ் வேதங்களை ஓதி சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் மூலவர் விமானத்தில் வரகு நிரப்பிய கலசம் பொருத்தப்பட்டது.

இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

நேற்று காலை நடைபெற்ற யாகசாலை பூஜையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, கோவில் தக்கார் அருள்முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், எம்.எல்.ஏ. சண்முகையா, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி கலெக்டர் சுகுமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version