“காங்கிரஸ் தலைவரை கழிவறையில் பூட்டினர் !” – பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு

பீஹாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெகுசாராயில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் பேசியதாவது :
“பீஹாரில் ஒருகாலத்தில் நடந்த காட்டாட்சியை மாற்றி, சிறந்த நிர்வாகத்தை அமைத்தோம். இப்போது மாநில வளர்ச்சிக்கான முக்கிய காலகட்டம் வந்துள்ளது. தேர்தலில் ஒரு புறம் அனுபவம் வாய்ந்த எங்களது தேஜ கூட்டணியும், மறுபுறம் குடும்ப ஆட்சியில் மூழ்கிய பெரிய கூட்டணியும் மோதுகின்றன,” என்றார்.

“ஆர்ஜேடி கட்சி பீஹாரின் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்தது. தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து செல்வதற்கும், முதலீட்டாளர்கள் மாநிலத்தை விட்டு ஓடுவதற்கும் இவர்களே காரணம். காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் ஊழலில் முழுகியுள்ளன; குடும்ப ஆட்சியை காப்பாற்றுவது மட்டுமே இவர்களின் நோக்கம்.”

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்தார் :
“நாட்டின் மிக அதிக ஊழல் செய்த குடும்பத்தின் தலைமையில் காங்கிரஸ் இயங்குகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி அவர்களை தங்களது சொந்த தலைமைத்துவமே கழிவறையில் பூட்டி அவமானப்படுத்தியது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்,” என்றார் மோடி.

“அந்த அவமானத்துக்குப் பின்னரும், அதே குடும்பத்தினரே இன்று கட்சியின் தலைமையில் இருக்கிறார்கள். அத்தகையவர்கள் நாட்டின் நலனைக் குறித்து சிந்திப்பார்கள் என்று நம்புவது தவறு. பீஹார் ஒருகாலத்தில் தொழில்முனைவர் மையமாக இருந்தது; ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தொழில்துறையையே பூட்டி விட்டனர்,” என மோடி தாக்கினார்.

பீஹார் சட்டசபைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த உரை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version