2025 ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்திற்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் இருவரும் தகுதிபெற்றுள்ளனர்.
கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில், இவர்கள் இருவரும் இறுதிப்போட்டியில் மோதிய நிலையில், இருமுறை ஜோகோவிச்சை தோற்கடித்து அல்காரஸ் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.
இந்த ஆண்டு, 7 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச், 8வது முறையாக அந்த பட்டத்தை கைப்பற்றுவதோடு, தனிப்பட்ட 25வது கிராண்ஸ்லாம் பட்டத்தையும் வெல்வதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளார். இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் எந்தவொரு வீரரும் 25 கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 38 வயதில் உள்ள ஜோகோவிச் இந்த வரலாற்றை மாற்றப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, விம்பிள்டன் ஆண்கள் சிங்கிள்ஸ் பட்டத்தை யார் வெல்வார் ? என்ற கேள்விக்கு, “ஜோகோவிச் வெல்லவேண்டும்” என பதிலளித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் பேசிய கோலி, “நான் நோவக்குடன் சமீப காலமாக தொடர்பில் இருக்கிறேன். நாங்கள் சில செய்திகளை பரிமாறிக் கொண்டோம். அல்காரஸ் மற்றும் ஜோகோவிச் இருவரும் ஃபைனலில் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் இந்தமுறை ஜோகோவிச்சே வெல்வார் என நம்புகிறேன்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது :
“எல்லாக் காலத்திலும் சிறந்த வீரர் யார் ?” என்ற விவாதத்தில், “ஜோகோவிச்சை எந்தவொரு வீரருடனும் ஒப்பிடலாம். அவர் முதலிடத்தில் இல்லாவிட்டாலும், அதிகபட்ச கிராண்ஸ்லாம் பட்டங்களை பெற்ற வீரர். அதற்கான முழுமையான தகுதியும் அவருக்கு இருக்கிறது,” என தனது பெருமையை வெளிப்படுத்தினார்.
















