“வாக்காளர் திருத்தப் பணியில் முறைகேடு நடக்கக் கூடாது — தி.மு.க. அரசு ஊழலில் மூழ்கியிருக்கிறது; எடப்பாடியார் ஆட்சியே தமிழகத்தை மீட்டெடுக்கும்” — ஆர்.பி. உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. கழகத்தின் சார்பில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது:
“தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அ.தி.மு.க. வரவேற்கிறது. ஆனால் இதில் அரசியல் கட்சிகள் சார்பில் செயல்படும் வாக்குச் சாவடி முகவர்கள் (BLO) மூலம் முறைகேடுகள் நடக்கும் அபாயம் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது,” என்றார். அவர் மேலும், “தி.மு.க. ஆதரவாளர்கள் சில இடங்களில் வாக்காளர் திருத்தப் பணிகளில் தலையிடும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் பட்டியலின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே நிர்வாகிகள் விழிப்புடன், கடுமையான கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

 “களப் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவார்கள். வெளியூர் சென்றவர்கள் உடனடியாக அவர்களைத் தொடர்பு கொண்டு தங்களின் வாக்காளர் விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தற்போது சரிபார்ப்பு நடைபெறுகிறது. வாக்காளர் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், படிவம் 6 மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வை குறிப்பிட்டு, “எடப்பாடியார் அங்கு சென்றபோது, பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் அதிமுக ஆட்சியே மீண்டும் வர வேண்டும் என்று கூறினர். அதிமுகவுக்கு எதிராக கூட தி.மு.க. சேலை அணிந்திருந்த பெண்களே இரட்டை இலையைக் காட்சியளித்தனர்,” என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
“தற்போதைய தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்தில் ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பள்ளிக்கரணையில் கட்டிடம் கட்டுவதற்கே ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக தகவல் உள்ளது. இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் தமிழக மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.   “நெல்லின் ஈரப்பதம் அதிகம் என்பதைக் காரணமாகக் காட்டி, தி.மு.க. அரசு நெல் கொள்முதலை தாமதப்படுத்துகிறது. ஆனால் எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் மத்திய அனுமதியைப் பெறுவதற்கு முன்பே 22% ஈரப்பதம் கொண்ட நெல்லையும் கொள்முதல் செய்தோம். இப்போது தி.மு.க. அரசு அதனைச் செய்ய முடியவில்லை,” என அவர் கூறினார். மேலும், “58 கால்வாய் திட்டம், திருமங்கலம் பிரதான கால்வாய் திட்டம் ஆகியவற்றில் தண்ணீர் திறப்பதற்கும் கடுமையாக கோரிக்கை வைத்த பிறகே தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தி.மு.க. அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது,” என்றார்.

 “இன்றைய நிலையில், தமிழகத்தை மீட்டெடுக்கும் திறன் எடப்பாடியாரிடம்தான் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும்.
இப்போது தி.மு.க. ஒரு ஓட்டுக்காக ரூ.50,000 கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளாக தி.மு.க. அரசு ஒரு மடிக்கணினி கூட வழங்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் நெருங்கியதால் 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்க டெண்டர் விடுவதாக அறிவிக்கிறது. மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவார்,” என்றார்.

 “நடிகர் விஜய், அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டோர் தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர். அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ‘கூட்டணி தர்மம்’ என்ற பெயரில் வாய் திறக்க மறுக்கின்றன.எனினும், 2026 ஆம் ஆண்டில் மக்கள் தீர்மானம் எடுத்து விட்டனர் — ‘எடப்பாடியாரே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்’,” என ஆர்.பி. உதயகுமார் உறுதியுடன் தெரிவித்தார்.

Exit mobile version