தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டு வந்த “காலனி” என்ற சொல்லை நீக்கி, குடியிருப்புகள் மற்றும் தெருக்களுக்கு பொதுவான பெயர்கள் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அரசு ஆவணங்களிலும் “காலனி” என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள உதயமரதிட்டு பகுதியில் இருந்த ‘தன்வாசிகாலனி’ என்ற குடியிருப்பு, ‘உதயம்நகர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பெயர் பலகை திறப்பு விழாவில் ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “காலனி என்ற பெயர் சமூக ரீதியாக பல பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதை உணர்ந்து, பொதுவான பெயர் வைக்க வழிவகுத்த திமுக அரசுக்கு நன்றி” என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதியமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசினார். “இதுவரை ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நிலையில் திமுக அரசை விமர்சிப்பது சரியல்ல. பனையூரை விட்டு வெளியே வந்து கள அரசியல் என்றால் என்ன என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
