அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, “செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை” என்று தெளிவாக கூறியுள்ளார். துரோகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அதிமுக மீண்டும் செழித்து வளரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், பின்னர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நெல் கொள்முதல் மையங்களில் ஏற்பட்ட சிக்கல்களைப் பற்றி கடுமையாக விமர்சித்தார்.
“விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் 15 நாட்களாக அங்கே குவிந்து கிடக்கின்றன. தினமும் 600 மூட்டைகள் மட்டுமே வாங்கப்படுகின்றன. இதனால் நெல் முளைத்து விடுகிறது. இதைச் சொன்னால் அவதூறு என முதல்வர் கூறுகிறார்,” என அவர் ஆவேசமாக பேசினார்.
அதேவேளை, மாநில அரசு வழங்கிய உணவு மானியக் கோரிக்கையில் தரப்பட்ட எண்ணிக்கைகளை சுட்டிக்காட்டி, “திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் அளவு குறைந்து விட்டது. ஆண்டுதோறும் 42.5 லட்சம் டன் வாங்கப்படுவதாக முதல்வர் கூறுவது பொய்,” என குற்றஞ்சாட்டினார்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்புநில பாதுகாப்பு திட்டத்தில் ரூ.165.68 கோடி நிதி அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் அந்தப் பகுதியில் நில ஆக்கிரமிப்பும் முறைகேடும் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் குறித்து, “மறைந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்கள் பெயர்கள் நீக்கப்பட வேண்டும். எஸ்ஐஆர் ஆய்வை திமுக எதிர்க்கும் நிலைப்பாடு, அதிமுக கூட்டணி 2026 தேர்தலில் வெற்றிபெறும் என்ற பயத்தால் தான்,” என அவர் வலியுறுத்தினார்.
செங்கோட்டையன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “துரோகிகளால் தான் அதிமுக கடந்த முறை வீழ்ந்தது. கட்சித் தலைமையின் கருத்தை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். செங்கோட்டையனை நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை. துரோகிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டனர்; களைகள் அகற்றப்பட்டு அதிமுக மீண்டும் செழித்து வளரும்,” என உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும், டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் இணைந்து பேசுவது “பயனற்றது” என்றும், “அவர்களைப் பற்றி பேசுவது வீண்” என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
 
			

















