சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை; நிரந்தர நலன் மட்டுமே உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது, “இந்தியா எந்த நாட்டையும் எதிரியாக கருதுவதில்லை. எங்கள் நாட்டின் மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்களின் நலன்களே எங்களுக்கு முக்கியம். சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பரோ எதிரியோ இல்லை. நிலையானது ஒரே ஒன்று – நாட்டு நலன் மட்டுமே,” என அவர் குறிப்பிட்டார்.
உலகம் வேகமாக மாறி வரும் சூழலில் புதிய சவால்கள் தொடர்ந்து எழுந்து கொண்டிருப்பதாகவும், தொற்றுநோய்கள், பயங்கரவாதம், பிராந்திய மோதல்கள் போன்றவை இந்த நூற்றாண்டை நிலையற்றதாக்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இத்தகைய சூழல்களில் சுயசார்பு என்பது விருப்பமல்ல, அவசியமாக மாறி விட்டதாக ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
அவர் மேலும், “2014-ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி 700 கோடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அது ரூ.24,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது, இந்தியா இறக்குமதியாளராக மட்டும் இல்லாமல், ஏற்றுமதியாளராகவும் மாறி வருவதை உறுதி செய்கிறது. நம் உபகரணங்கள் துல்லியமாக இலக்குகளைத் தாக்குவதை நிரூபித்துள்ளது. எந்த பணியும் தொலைநோக்கு பார்வை, தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இன்றி வெற்றியடைய முடியாது,” என தெரிவித்தார்.