அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த ‘மாவீரன்’ காடுவெட்டி குரு என்ற குருநாதனின் 65-வது பிறந்தநாள் விழா, இன்று ‘வன்னியர் ஜெயந்தி’ விழாவாக மாவட்டம் முழுவதும் உணர்ச்சிப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதியினை வன்னியர் ஜெயந்தியாக மாவீரன் மஞ்சள் படையினர் கொண்டாடி வரும் நிலையில், இந்த ஆண்டு விழா அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, காடுவெட்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் (சமாதி) மற்றும் மணிமண்டபத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து தங்களது தலைவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படையின் நிறுவனருமான குரு கனலரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீ காந்திமதி அவர்கள் காடுவெட்டிக்கு நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். அவர் முதலில் காடுவெட்டி குருவின் சமாதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காடுவெட்டி பிரதான சாலையில் கம்பீரமாக அமைந்துள்ள குருவின் மணிமண்டபத்திற்குச் சென்ற ஸ்ரீ காந்திமதி, அங்குள்ள முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செய்தார்.
இந்த விழாவில் பாமக, வன்னியர் சங்கம் மற்றும் மாவீரன் மஞ்சள் படையைச் சேர்ந்த நிர்வாகிகள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் மஞ்சள் கொடிகளுடனும், “மாவீரன் புகழ் ஓங்குக” என்ற முழக்கங்களுடனும் கலந்துகொண்டனர். வன்னியர் சமூகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் சமரசமின்றிப் போராடிய காடுவெட்டி குருவின் தியாகங்களைப் போற்றும் வகையில் இந்தப் பிறந்தநாள் விழா அமைந்தது. அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் திரண்டு வந்த தொண்டர்களால் காடுவெட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவினை முன்னிட்டுப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

















