மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கான விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம், இந்த வகை விசா பெறுவதற்கான நிதிச்சுமை பெரிதும் உயர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கை, ‘ஒரு மிகப்பெரிய அழகிய மசோதா’ என்ற பெயரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஜூலை 4ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த சட்டத்தின் மூலம் தொழில்முனைவோர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கு விசா வழங்கும் போது, ஒரு நிச்சய தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்த நடைமுறை, டிப்ளோமேடிக் விசா தவிர அனைத்து குடியுரிமையற்ற விசா விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு தொகை ஆண்டுதோறும் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பி-1 மற்றும் பி-2 விசாக்கள் (சுற்றுலா மற்றும் தொழில்சார்ந்த பயணங்கள்) பெறுவதற்கு ரூ.15,855 கட்டணமாகும். மேலும், ஒருங்கிணைந்த கட்டணமாக ரூ.21,000 உட்பட மொத்தமாக ரூ.40,456 வரை செலவாகும். இது முந்தைய கட்டணங்களைவிட சுமார் இரண்டரை மடங்கு அதிகம் ஆகும்.
மேலும், இந்த வைப்பு தொகையை திருப்பப் பெற, விசா காலாவதியாகும் முன் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால், அமெரிக்கா செல்ல விரும்பும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் குறைவு ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.
இதே வேளையில், சீன அரசு தனது சுற்றுலா விசா முறையில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 75 நாடுகளின் பயணிகளுக்கு 30 நாட்கள் வரை விசா இல்லாமல் சீனாவில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், அந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
