
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை ‘மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார். மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா–அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த காலக் கெடுவையும் கடந்து இழுபறி நீடித்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதலில் 25 சதவீத வரி விதிப்பை அவர் அறிவித்தார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, ‘உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதித்து அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்து 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பிரபல வணிக ஊடக நிறுவனத்துடனான நேர்காணலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:– மேற்கத்திய நாடுகளின் கடுமையான அழுத்தத்தையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை தொடர்ந்து வாங்கி வரும் இந்தியாவை தண்டிக்கும் நோக்கில் இந்த 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா அதை நிறுத்தினால் நிச்சயம் கூடுதல் வரி விதிப்பு குறைக்கப்பட்டு வெறும் 25 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படும். இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்ற காரணத்தால் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய தரப்புக்கு மறைமுக உதவி கிடைக்கிறது. அந்த நிதி ஆதாரத்தை கொண்டுதான் ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை தொடர்கிறது. இதன் மூலம் ரஷ்ய யுத்தம் செய்ய இந்தியா உதவுகிறது. இந்தியாவின் இந்த செயல் அமெரிக்கர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் ’மோடியின் போர்’. இந்தியா தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதன் மூலம் ரஷ்யா நிதி ஆதாயம் அடைகிறது. அந்த நிதியை கொண்டு படை பலத்தை ரஷ்யா உறுதி செய்கிறது. அதோடு உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறது. உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. அதற்கான நிதி ஆதாரம் அமெரிக்க மக்கள் செலுத்தும் வரிதான். அதனால் தான் இந்தியாவின் இந்த செயல் அமெரிக்கர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறதுஎன்கிறேன். இந்தியா தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறது. தாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணை வாங்குவோம். அது எங்களின் இறையாண்மை எனக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் அதிக வரிகள் கூடாது என சொல்கிறது என கூறியுள்ளார்.