மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆன்மிக விழாவில், பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் “கம்பன் எனும் ராம பக்தன்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கம்பராமாயணத்தின் நுணுக்கங்களையும், ராமனின் வாழ்வியல் விழுமியங்களையும் தற்காலச் சூழலோடு ஒப்பிட்டு அவர் நிகழ்த்திய உரை சமூக வலைதளங்களிலும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, பள்ளி தாளாளர் பார்த்தசாரதி மற்றும் மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர் சங்கர சீத்தா ராமன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் பேசுகையில், “மலைகளிலும் குன்றுகளிலும் தீபத் தூண்கள் ஏற்றும் வழக்கம் ஏதோ சமீபகாலத்தில் உருவானது அல்ல; இது ராமாயண காலத்திலேயே நடைமுறையில் இருந்த ஒரு உன்னத பாரம்பரியம். கம்பர் ராமன் மீது கொண்ட எல்லையற்ற பக்தியைத் தனது அமுதத் தமிழால் வெளிப்படுத்தினார். இன்றைய தலைமுறையில் பலர் தமிழ் மொழி குறித்துப் பேசினாலும், அவர்களுக்குச் சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு போன்ற அடிப்படை இலக்கிய அறிவு குறைவாகவே உள்ளது. ராமாயணம் உலகெங்கிலும் 127 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆதி காவியத்தை எழுதிய வால்மீகி முனிவர் தமிழகத்தில் வசித்து வந்தவர் என்பது தமிழகத்திற்கும் ராமாயணத்திற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பைப் பறைசாற்றுகிறது,” என்றார்.
தொடர்ந்து சனாதன தர்மத்தின் சிறப்புகள் குறித்துப் பேசிய அவர், “நம் பாரத தேசத்தில் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் திருநீறு இட்டுக்கொள்வதைத் தர்மமாகக் கொள்ள வேண்டும். இதை மற்ற மதங்களோடு ஒப்பிட்டு நாம் குழப்பமடையத் தேவையில்லை. ஞானத்தைத் தேடும் ஆர்வத்தில் கர்வம் இருக்கக் கூடாது. குழந்தைகளுக்குத் தர்மத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குரு வழியாக நாம் பெரும் ஞானத்தைப் பல லட்சம் பேருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். ராமரின் பரம்பரை குரு வம்சத்தைச் சார்ந்தது என்பதால் தான் போர்க்களத்திற்கு ‘குருஷேத்திரம்’ என்ற பெயர் வந்தது,” என விளக்கமளித்தார்.
நவீன காலக் குடும்ப உறவுகள் குறித்துப் பேசுகையில், “இன்றைய சூழலில் ஒரு நபர் தனது மனைவியோடு செலவிடும் நேரத்தை விட அலுவலக நண்பர்களோடு அதிக நேரம் செலவிடுகிறார். இதனால் இயல்பாகவே சக ஊழியர்களிடம் அன்பு அதிகரித்து, குடும்ப உறவுகளில் பிணைப்பு குறைகிறது. இதன் விளைவாகவே விவாகரத்துகள் பெருகி வருகின்றன. மனித மனதின் காமம் மற்றும் குரோதங்களை வென்று, தம்பதியரிடையே பிணைப்பை வலுப்படுத்த ராமாயணத்தைப் படிக்க வேண்டும். ராமாயணம் என்பது உண்மையில் ஒரு தூய்மையான காதல் காவியம். காதலின் சின்னமாக நாம் தாஜ்மஹாலைப் போற்றி வருகிறோம். ஆனால், தனது காதல் மனைவியைச் சிறை மீட்கக் கடலில் பாலம் அமைத்த ராமனின் சேதுபாலமே காதலின் உன்னதச் சின்னமாகப் போற்றப்பட வேண்டும். கம்பரும் வால்மீகியும் கண்ட அந்த மெய்ஞானத்தை உணர்ந்தால் இல்லறம் நல்லறமாகும்,” என உருக்கமாகப் பேசி முடித்தார்.
