திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அடிப்படைப் பாதை வசதி இல்லாததாலும், இருந்த பாதையைச் சில தனிநபர்கள் ஆக்கிரமித்து மறித்ததாலும், உடல்நிலை சரியில்லாத ஒரு பெண்ணையும், நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணையும் உறவினர்கள் கட்டிலில் வைத்து ஓடை வழியாகச் சுமந்து சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன காலத்தில் விண்ணைத் தொடும் வளர்ச்சி குறித்துப் பேசப்பட்டு வரும் வேளையில், மருத்துவ உதவிக்குக் கூடப் பாதை இல்லாமல் மக்கள் அவதிப்படுவது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சாணார்பட்டி ஒன்றியம், கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்க்கரை (55). கூலித் தொழிலாளியான இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (50), கடந்த சில காலமாகவே தீவிர நரம்புப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இவர்களது மகன் ஜீவரத்தினம் மற்றும் மகள் ஸ்ரீபிரியா ஆகியோர், வெள்ளையம்மாளைத் தொடர் சிகிச்சைக்காக அவ்வப்போது 108 ஆம்புலன்ஸ் அல்லது ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இவர்கள் வசித்து வரும் தோட்டத்து வீட்டிற்குச் செல்ல நீண்டகாலமாக ஒரு பாதையைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் பயன்படுத்தி வந்த அரசு நிலத்தின் ஒரு பகுதியை, அருகில் வசிக்கும் சிலர் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி முள்வேலி அமைத்து அத்துமீறி அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டிற்குச் செல்லும் ஒரே பாதையும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில், வெள்ளையம்மாளுக்குத் திடீரென உடல்நலம் மிகவும் குன்றிப் போகவே, பதற்றமடைந்த குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆனால், பாதை கற்களாலும் முட்களாலும் அடைக்கப்பட்டிருந்ததால், ஆம்புலன்ஸ் வாகனத்தால் வீட்டிற்கு அருகில் வர முடியாமல் பிரதான சாலையிலேயே நின்றது.
நிலைமை மோசமடைவதைக் கண்ட உறவினர்கள், வேறு வழியின்றி வெள்ளையம்மாள் படுத்திருந்த கட்டிலோடு அவரைத் தூக்கிக் கொண்டு கரடுமுரடான ஓடைப் பகுதியில் இறங்கிச் சென்றனர். இதற்கிடையே மற்றொரு சோகமாக, சர்க்கரையின் மகள் ஸ்ரீபிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருக்கும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரும் இதே மோசமான பாதையில் சிரமப்பட்டு சாலையை அடைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இக்கட்டான மருத்துவச் சூழலில் இருந்தபோது, ஆம்புலன்ஸ் அருகில் வரமுடியாத அவலநிலை அங்கிருந்தவர்களைக் கண்ணீர் விடச் செய்தது.
அதன்பின்னர், ஒருவழியாகச் சாலைக்குக் கொண்டு வரப்பட்ட இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பொதுப் பாதையைத் தனிநபர்கள் ஆக்கிரமித்து வேலி அமைத்ததே இந்த அவலநிலைக்குக் காரணம் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவசர காலங்களில் கூட ஆம்புலன்ஸ் வர முடியாத வகையில் பாதையை மறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் தங்களுக்குப் பாதை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
