மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையின் காரணமாக, பசுமை போர்த்திய மலைத்தொடர்களின் மத்தியில் இயற்கையின் எழிலுடன் தூவத்தூர் அருவி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த அழகியக் காட்சியைக் காண உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
கொடைக்கானலில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை மற்றும் மலைப்பகுதிகளில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கும்பூர் அக்கரைக்காடு மலைக் கிராமத்திற்கு இடையே இயற்கை எழில் கொஞ்சும் தூவத்தூர் அருவி அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக மேல்மலைக் கிராமப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக, தூவத்தூர் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து, வெள்ளியை உருக்கிக் கொட்டியது போல் பாய்ந்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த அருவியைச் சுற்றியுள்ள பசுமை போர்த்திய மலை முகடுகளையும், ஆழமான நீண்ட பள்ளத்தாக்குகளையும், சோலைக்காடுகளையும் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொடைக்கானலில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கும்பூர் அக்கரைக்காடு மலைக் கிராமப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த அருவியின் அழகினை உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன் ரசித்துச் செல்கின்றனர். அருவியின் அருகே சிறிது தூரம் நடந்து சென்று, பசுமை போர்த்திய மலைமுகடுகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு இளைப்பாறி மகிழ்கின்றனர். பலர் இந்த அழகிய அருவியைச் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துத் தங்கள் பயண நினைவுகளைப் பதிவு செய்து கொள்கின்றனர்.
இயற்கை அழகு கொஞ்சும் தூவத்தூர் அருவியின் அழகைச் சுற்றுலாப் பயணிகள் எளிதாகக் காணும் வகையில், அருவியின் புகைப்படத்துடன் கூடிய பெயர் பதாகைகளை மேல்மலைக் கிராம சாலைகளில் வைக்க வேண்டும் என்றும், சுற்றுலாப் பயணிகள் அருவியின் அருகில் சென்று ரசிப்பதற்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மலைக் கிராம மக்கள் சுற்றுலாத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை ஏற்று சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்தால், இந்தப் பகுதி மேலும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
















