உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் தொழிலதிபர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் உன்னத நோக்கத்துடன் துவங்கப்பட்ட ‘தி ரைஸ்’ (The Rise) அமைப்பின் 16-வது சர்வதேச மாநாடான ‘சங்கம் 5: மா மதுரை 2026’, தமிழகத்தின் கலாச்சார மையமான மதுரையில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. 2016-ஆம் ஆண்டு மதுரையிலேயே தனது முதல் அடியை எடுத்து வைத்த இந்த அமைப்பு, பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக மாநாடுகளை நடத்திய பிறகு, தற்போது தனது 16-வது மாநாட்டிற்காக மீண்டும் மதுரை மண்ணிற்குத் திரும்பியுள்ளது சிறப்பம்சமாகும். இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வாக, தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டி அலங்காநல்லூரில் உள்ள டாக்டர் கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கில் ‘உலகத் தமிழர் ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த வீர விளையாட்டினை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 750 துடிப்பான காளைகளும், அவற்றை அடக்கத் துணிந்த 250 மாடுபிடி வீரர்களும் உற்சாகத்துடன் களமிறங்கினர். களத்தில் சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு அடக்கி, பல்வேறு பரிசுகளை வென்று பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். இந்த விழாவில் தி ரைஸ் குளோபல் அமைப்பின் நிறுவனர் ஃபாதர் ஜெகத் கஸ்பர் ராஜ், தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் பி.ராஜசேகரன், தி ரைஸ் ஜல்லிக்கட்டு பிரிவு பொதுச் செயலாளர் பாலகுரு, தென்மண்டல இயக்குனர் பெரிஸ் மகேந்திரவேல் மற்றும் மதுரை தலைவர் பதஞ்சலி சரவணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
ஜனவரி 11-ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ‘சங்கம் 5’ மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா என உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 55 நாடுகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட முன்னணி தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். வெறும் வணிக மாநாடாக மட்டுமில்லாமல், தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் வீர விளையாட்டுகளை உலகத் தரத்தில் பறைசாற்றும் ஒரு தளமாக இம்மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழில் வல்லுநர்களிடையே பரஸ்பர உறவை மேம்படுத்தவும், தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வளர்ந்து வரும் இள ர்களுக்கு வழிகாட்டவும் இம்மாநாடு ஒரு பாலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் தமிழர்களின் பொருளாதார வலிமையை பறைசாற்றும் வகையில், வரும் நாட்களில் பல்வேறு முக்கிய அமர்வுகளும் தொழில் சார்ந்த ஆலோசனைகளும் இம்மாநாட்டில் நடைபெறவுள்ளன.














