முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூக்கரகத்துடன் ஈஷாவில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ‘லிங்க பைரவி’ தேவியின் பிரதிஷ்டை தின விழா மற்றும் தைப்பூசத் திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி முழக்கங்களுடன் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டு இதே தைப்பூசத் திருநாளில் தான் லிங்க பைரவி திருமேனி சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தப் புனிதமான நாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த விழாவில், இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக, முளைப்பாரிகளால் மிக நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் வடிவமைக்கப்பட்ட லிங்க பைரவி தேவியின் திருவுருவத்தைப் பல்லக்கில் ஏந்தி, பக்திப் பாடல்கள் முழங்கப் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் தேவியின் அருளைப் பெற உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த வெளிநாட்டினர் எனப் பலதரப்பட்ட மக்கள் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து பங்கேற்றனர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் தலைகளில் முளைப்பாரி, பூக்கரகம் மற்றும் பூவோடு ஆகியவற்றைச் சுமந்து, தேவியின் நாமங்களை முழங்கியபடி பக்திப் பரவசத்துடன் பாதயாத்திரையாக வந்தனர். வண்ணமயமான இந்த ஊர்வலம் ஈஷா வளாகத்தையே ஆன்மீக அதிர்வலைகளால் நிரப்பியது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் கடந்த 21 நாட்களாக மேற்கொண்டு வந்த ‘பைரவி சாதனா’ எனும் தீவிர ஆன்மீக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சி லிங்க பைரவி வளாகத்தில் பக்திபூர்வமாக நடைபெற்றது.

மாலை வேளையில் லிங்க பைரவி தேவிக்குத் தனித்துவமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேவியின் திவ்ய தரிசனம் பெற்றுச் சென்றனர். ஆடல், பாடல் மற்றும் ஆன்மீகச் சடங்குகளுடன் நடைபெற்ற இந்தத் தைப்பூசத் திருவிழா, வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஒரு மறக்க முடியாத ஆன்மீக அனுபவமாக அமைந்தது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஈஷா யோகா மையத் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Exit mobile version