முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனியில், உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 26-ஆம் தேதி திங்கட்கிழமை பெரியநாயகி அம்மன் கோவில் கொடிகட்டி மண்டபத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், கோவை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனியில் குவிந்து வருகின்றனர். தோள்களில் விதவிதமான காவடிகளைச் சுமந்து, மேளதாளங்கள் முழங்க ‘அரோகரா’ கோஷத்துடன் ஆடிப்பாடி வரும் பக்தர்களால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவிழாவின் ஆறாம் நாளான இன்று (ஜனவரி 31, சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்கினத்தில், பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானை திருக்கல்யாண வைபவம் பக்திப் பெருக்குடன் நடைபெறவுள்ளது. திருமணக் கோலத்தில் காட்சியளிக்கும் முருகப்பெருமான், இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் நாளை (பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நாளை அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் சண்முக நதியில் முருகப்பெருமான் தோளுக்கு இனியானில் எழுந்தருளி, தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை காலை 11:15 மணி முதல் 12 மணிக்குள் சுவாமி தேரேற்றம் நடைபெறும் நிலையில், மாலை 4 மணிக்கு மேல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்கத் திருத்தேரோட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைப் பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம். சுப்பிரமணியம், அறங்காவலர்கள் தனசேகர், சு. பாலசுப்பிரமணி, ஜி.ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் அன்னபூரணி ஆகியோர் முன்னின்று செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பழனி மலைக்கோயில் மற்றும் ரத வீதிகள் களைகட்டியுள்ளன.














