பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மரபேட்டை நகர மன்ற நடுநிலைப்பள்ளி அருகே உள்ள பகுதி, கழிப்பிட வசதி இல்லாததால் பல மாதங்களாக திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவது குறித்து பொதுமக்கள் கடுமையான அவதி தெரிவித்து வருகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்ற பிரச்சினை, கொசு தொல்லை, குடிநீர் மாசடைதல் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் பெருமளவில் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையை கவனித்த முன்னாள் துணைச் சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமன், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையே இந்த சிரமத்திற்கு காரணமாகக் குறிப்பிட்டார். ஜெயராமன் கூறுகையில்: “பள்ளிக்கு மிக அருகாமையில் இருந்த பொதுக் கழிப்பிடத்தை நகராட்சி நிர்வாகம் மழை காரணமாக மூடி வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளி பகுதியில் கழிப்பதற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகத் தவறாகும். அந்தக் கழிப்பிடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்,” என தெரிவித்தார்.
இதனுடன், வாக்காளர் பட்டியலைப் பற்றிய விவகாரம் தொடர்பாக அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக அரசு வாக்காளர்களை குழப்பும் நோக்கில் செயல் படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஜெயராமன் கூறியதாவது: “கள்ள ஓட்டு போடுவது திமுகவிற்கு கைவந்த கலை” “வாக்களித்த பின் கையில் தடவும் மையை சுத்தம் செய்ய ‘மேஜிக் SIR’ வைத்திருக்கிறார்கள்”“போலி வாக்காளர்களை நீக்கினால் திமுக கள்ள ஓட்டு போட முடியாது. கள்ள ஓட்டு போடாவிட்டால் திமுகவின் சாயம் வெளுத்து விடும். அதனால்தான் ஸ்டாலின் பதறுகிறார், கூப்பாடு போடுகிறார்,” என சாடினார். வாக்காளர் பட்டியல் குறித்து மேலும் அவர் கூறியது: “20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயர்கூட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.” “உள்ளூர் பகுதிகளை விட்டு வெளியே சென்று முகவரி மாற்றியவர்கள், வேறு மாவட்டங்களில் குடியேறியவர்கள் — அனைவரின் பெயர்களும் இங்கும் கிடைத்துவிடுகிறது.”
“குடும்ப அட்டையுடன் இரண்டு இடங்களில் பெயர் இருப்பதால், ஒரு இடத்தில் வாக்களிக்க வராதவரின் வாக்கை நேரம் பார்த்து கள்ள ஓட்டு போட திமுக திட்டமிட்டிருந்தது. “இப்போது போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால், அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. அதனால் திமுக போராட்டம் செய்கிறது,” என்றார். தமது கருத்தை தெளிவுபடுத்திய ஜெயராமன் மேலும் கூறினார்: “உண்மையான வாக்குரிமை உள்ள ஒவ்வொருவரின் வாக்கும் பாதுகாக்கப்படும். யாருடைய வாக்கும் பறிக்கப்பட மாட்டாது. அனைத்து கட்சிகளும் உண்மையான வாக்காளர்களுக்கு பாதுகாவலாக நிற்க வேண்டும். மக்கள் அமைதியாக இருக்கலாம்,” என உறுதியளித்தார்.
