தெத்தூர் வீடுகளைச் சூழும் கழிவுநீர்  கொசுத்தொல்லையாலும், துர்நாற்றத்தாலும் மக்கள் அவதி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தெத்தூர் கிராமத்தில் முறையான வடிகால் வசதி இன்றி, தெருக்களிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டும், அடிப்படைத் தேவையான சாக்கடை வசதியை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெத்தூர் கிராமத்தில் கிராம மந்தை திடல், வல்லான் கோயில் தெரு உள்ளிட்ட அனைத்து முக்கியத் தெருக்களிலும் சமீப காலங்களில் சிமெண்ட் சாலைகள் மற்றும் ‘பேவர் பிளாக்’ கற்கள் பதிக்கப்பட்ட நவீன சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தச் சாலைகளை அமைக்கும்போது கழிவுநீர் வெளியேறுவதற்கான வடிகால் (Drainage) வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டனர். குறிப்பாக, கிராம மந்தை பகுதியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல நிலையில் இருந்த சிமெண்ட் சாலையின் மீதே, மீண்டும் ‘பேவர் பிளாக்’ கற்களைப் பதித்துச் சாலையை மேடாக்கினர். இதனால் சாலையின் மட்டம் வீடுகளின் மட்டத்தை விட உயர்ந்துவிட்டதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களிலேயே குளம் போலத் தேங்கி நிற்கிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் தெருக்களில் ஒரு அடிக்கும் மேலாகக் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. வெயில் அடித்தால் மட்டுமே இந்த நீர் காயும் நிலை உள்ளது. அத்துடன், சமீபத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காகப் புதிய சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டதால், சாலைகள் முழுவதும் மேடு பள்ளங்களாக மாறிப் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சில கிராம மக்கள், தங்கள் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதைத் தடுக்க வீட்டின் முன் மண்ணைக் கொட்டி மேடாக்கிக் கொண்டுள்ளனர்.

மாதக் கணக்கில் தேங்கி நிற்கும் இந்தக் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இரவு பகல் பாராமல் கொசுக்களின் உற்பத்தி மையமாகத் தெருக்கள் மாறியுள்ளன. இதனால் மர்மக் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. “அதிகாரிகள் சாலை அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை, வடிகால் அமைப்பதில் காட்டவில்லை; முறையான திட்டமிடல் இல்லாத பணிகளால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதுடன் எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது” எனத் தெத்தூர் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அலங்காநல்லூர் ஒன்றிய நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தெத்தூர் கிராமத்தில் புதிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Exit mobile version