கோவையின் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பி.எஸ்.ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற ‘காதம்பரி’ இசை மற்றும் கலாச்சாரத் திருவிழா வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இது குறித்து பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநரும், கலை ஆர்வலருமான டாக்டர் புவனேஸ்வரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவில் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும், உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் கச்சேரிகளும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். விழாவின் முதல் நாளான ஜனவரி 2-ம் தேதி, பி.எஸ்.ஜி. கல்வி நிறுவன மாணவர்களின் ‘தர்ம ஸ்வரங்கள்’ என்ற மெல்லிசை நிகழ்ச்சியுடன் விழா இனிதே தொடங்குகிறது. அன்றைய தினமே கலைத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ‘கலை சுடர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
விழாவின் இரண்டாம் நாளான ஜனவரி 3-ம் தேதி, மாணவர்களின் ‘தசாவதார தர்மம்’ என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியும், இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் ‘யுவ கலாரத்னா’ விருது வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘மதுர சங்கீதம்’ என்ற கர்நாடக இசைக் கச்சேரி செவிகளுக்கு விருந்து படைக்கவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, ஜனவரி 4-ம் தேதி பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் பெற்ற பிரபல கர்நாடக இசை மேதை சுதா ரகுநாதனின் சிறப்பு இசைக் கச்சேரி நடைபெறுகிறது. இறுதி நாளான ஜனவரி 5-ம் தேதி, மாணவர்களின் ‘உள்ளம் உருகுதையா’ கர்நாடக இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திரையிசை மற்றும் கர்நாடக இசையில் முத்திரை பதித்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷின் ‘தர்மம் தலைக்காக்கும்’ என்ற ‘லைட் கிளாசிக்கல்’ இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
இந்த நான்கு நாட்களும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கலை மற்றும் இசை ஆர்வலர்களின் வசதிக்காக இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு அடிப்படையில் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இசை மற்றும் நடனக் கலைகளைப் போற்றும் விதமாகவும், மாணவர்களிடையே கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பி.எஸ்.ஜி. நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சிக்குக் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 98947 59940, 98947 59934, 87540 22880 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தங்களது இடங்களை உறுதி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
