திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணி  ரூ.7 கோடி பாலம் உட்படப் பல திட்டங்களைத் திட்ட இயக்குநர் நேரில் ஆய்வு!

 திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயர்மட்டப் பாலம், சாலை மேம்பாடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ. திலகவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 வேடசந்தூர் வட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியம், பாடியூர் ஊராட்சிக்குட்பட்ட என். பாறைப்பட்டியில் மாநில சிறப்பு உதவித் திட்டம் 2025-–2026-ன் கீழ், ரூ.7.08 கோடி மதிப்பீட்டில் சந்தனவர்த்தி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் தற்போதைய நிலை மற்றும் தரம் குறித்துச் செய்தியாளர்களுடன் சென்று திட்ட இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சாலை மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்த அவர், முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாடியூர் முதல் தம்பிநாயக்கன் பாறைப்பட்டி வரை ரூ.36.97 லட்சம் மதிப்பிலும், அன்னசவுட கவுண்டன்பட்டி முதல் எலப்பார்பட்டி வரை ரூ.46 லட்சம் மதிப்பிலும் நடைபெற்று வரும் சாலைப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், மோர்பட்டி ஊராட்சியில் நாபர்டு (NABARD) திட்டத்தின் கீழ் ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் அய்யலூர் முதல் செங்குறிச்சி வரை மேம்படுத்தப்பட்ட சாலைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

பாகாநத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1.03 லட்சம் மதிப்பீட்டில் சாலையோரம் 200 மரக்கன்றுகள் நடும் பணிகளையும், வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளையும் பார்வையிட்டார். மேலும், தொப்பம்பட்டி ஒன்றியம் கள்ளிமந்தையம் ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றுப்பண்ணைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ்.பி நகர் பகுதியில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 134 வீடுகளின் கட்டுமானப் பணிகளைத் திட்ட இயக்குநர் நேரில் பார்வையிட்டார். பயனாளிகளுக்குத் தரமான வீடுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், சரவணன் மற்றும் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். மாவட்டத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் இத்தகைய திட்டங்கள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version