சிறுமிகளில் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை அதிகரிப்பு ! மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சமீபத்தில் வெளியான ஒரு மருத்துவ ஆய்வில், சமூக வலைதளங்களின் பெரும் பயன்பாடு மற்றும் நெடுநேர ஸ்மார்ட்போன் உபயோகத்தின் விளைவாக, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அதிகளவில் கர்ப்பப்பை நீர்க்கட்டி (PCOS – Polycystic Ovary Syndrome) பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, டெல்லி நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 17.4% சிறுமிகள் நீர்க்கட்டி பிரச்சனையில் அவதிப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவக் கட்டுரை ஒன்றில், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பெருமாக பயன்படுத்துவது, மன அழுத்தம், உளச்சுழற்சி மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துகிறது என்றும், இது கருப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூக்கமின்மை – ஹார்மோன் குழப்பத்திற்கு வழி
இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது, தூக்கத்தைக் குறைத்து, உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சீராக இயங்க முடியாமல் செய்வதாகவும், இதுவும் நீர்க்கட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை தூண்டுகிறது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தீர்வாக என்ன ?
மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “இளம் வயதிலேயே இந்த நிலை பாதிப்பது மிக கவலைக்குரியது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தி, தினசரி உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமே இந்த பிரச்சனையை தவிர்க்க முடியும்” என தெரிவித்துள்ளனர்.