பிரதமர் நரேந்திர மோடி மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட கண்டனத்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “திமுகவினர் பிகார் தொழிலாளர்களை அவமதித்துள்ளனர்” என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதை எதிர்த்து, முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை மறந்து, இத்தகைய கருத்துகள் அவரின் பொறுப்புக்குரிய மரியாதையை இழக்கச் செய்கின்றன” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: “பிரதமர் திமுகவையே குற்றம்சாட்டினார்; தமிழர்களை அல்ல. ஆனால், சிலர் ‘திமுக = தமிழர்’ என்ற தவறான எண்ணத்தில் பேசுகிறார்கள். திமுகவில் உள்ளவர்கள் எல்லோரும் தமிழர்களே அல்ல. திமுக அமைச்சர் கே.என். நேரு மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் போன்றோர் பிகார் மக்களை இழிவாக பேசியிருக்கிறார்கள்.
அதனால், திமுகவிற்கு எதிரான குற்றச்சாட்டை தமிழர்களுக்கு எதிரானதாக மாற்றிப் பேசுவதை எட்டு கோடி தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஸ்டாலினின் கண்டனப் பதிவு தேவையற்றது” என அவர் தெரிவித்தார்.
மேலும், “உதயநிதி அல்லது ஸ்டாலின் பிகார் சென்றால் அங்குள்ள மக்கள் அவர்களை எதிர்ப்பார்கள். அதுபோல், செங்கல்பட்டு பகுதியில் உதயநிதி சென்றால் சனாதனத்தை பின்பற்றும் மக்கள் அவரை எதிர்க்கலாம்” என்றும் தமிழிசை எச்சரித்தார்.
 
			















