தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் அனைவரும் மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று (10.01.2026) மிகச் சிறப்பாகத் தொடங்கியது.
கும்பகோணம் 26-வது வார்டுக்கு உட்பட்ட காந்தியடிகள் சாலையில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் (ரேஷன் கடை) நடைபெற்ற விழாவில், 602 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மற்றும் ரொக்கப் பணத்தை திமுக தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை க.அன்பழகன் நேரில் வழங்கித் தொடங்கி வைத்தார். பயனாளி ஒவ்வொருவருக்கும் தரமான பொங்கல் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்த அவர், வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் தனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி துணை மேயரும் மாநகரச் செயலாளருமான சுப. தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் இந்தச் சிறப்புப் பொங்கல் தொகுப்பு, சாதாரண எளிய மக்களும் பண்டிகையைத் தடையின்றி கொண்டாடப் பெரும் உதவியாக இருக்கும் எனப் பயனாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். குறிப்பாக, 3,000 ரூபாய் ரொக்கப் பணம் ஏழை எளிய மக்களின் பண்டிகைக்காலச் செலவுகளுக்குப் பேருதவியாக அமையும் என விழாவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த விழாவில் ஒன்றியச் செயலாளர்கள் டி. கணேசன், ஜெ. சுதாகர், செயற்குழு உறுப்பினர் குட்டி தெட்சிணாமூர்த்தி, மாநகர திமுக நிர்வாகிகள் வாசுதேவன், ரவிச்சந்திரன், சிவானந்தம், செந்தாமரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக பகுதிச் செயலாளர்கள் கண்ணன், இரா. கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், மண்டலக் குழுத் தலைவர்கள் மனோகரன், பாபு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கீதா விஜயகுமார், பிரித்திபாண்டியன், டி.ஆர். அனந்தராமன் ஆகியோர் பங்கேற்றனர். அரசுத் தரப்பில் வட்ட வழங்கல் அலுவலர் அருள்செல்வன், சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை சரகத் துணைப் பதிவாளர் பிரியதர்ஷினி, துணைப் பதிவாளர் மற்றும் மேலாண் இயக்குனர் சுரேஷ் ஆகியோர் விநியோகப் பணிகளை முறைப்படுத்தினர். கும்பகோணம் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் நாட்களில் இந்தப் பொங்கல் தொகுப்பு தடையின்றி வழங்கப்பட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

















