திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தாயுடன் தரிசனத்திற்காக வந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் மீது இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 29ஆம் தேதி நள்ளிரவு, கோவிலுக்கு வந்த இளம்பெண்ணும், தாயாரும், மினிவேனில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் இடைமறித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தாயாரை அப்புறப்படுத்தி, இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை காவல்துறை வழக்கு பதிவு செய்து இரு காவலர்களையும் கைது செய்துள்ளது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் போலீஸ் துறை அறிவித்துள்ளது.
பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது, உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.