பொதுவாகத் திருமணத்திற்குப் பிறகு பெண் தான் கணவர் வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், பல தலைமுறைகளாக இதற்கு நேர்மாறான, பெண்களைப் பெருமைப்படுத்தும் ஒரு வியக்கத்தக்க நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி எல்லைகளில் உள்ள சிவகளை, புதூர், செக்காரக்குடி, தளவாய்புரம், பணகுளம், ஏரல் போன்ற கிராமங்களில் வசிக்கும் “நன்குடி வேளாளர்” சமூகத்தில், திருமணத்திற்குப் பிறகு மணமகன் தான் மணமகளின் வீட்டிற்குச் சென்று தங்கி வாழ்கிறார். பெண் தனது வாழ்நாள் முழுவதும் தனது பெற்றோருடனேயே இருப்பதை இச்சமூகம் உறுதி செய்கிறது.
இச்சமூகத்தில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு பெண்களிடமே உள்ளது. வீடு, விவசாய நிலம் மற்றும் வாழ்வாதார வருவாய் அனைத்தும் பெண் குழந்தைகளின் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. மணமகன் வீட்டாருக்கு வழங்கப்படும் நகை மற்றும் பணம் நேரடியாகத் தரப்படாமல், பெண்ணின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன் சான்றிதழ் மட்டுமே மாப்பிள்ளை வீட்டாருக்குக் காட்டப்படும். இது பிற்காலத்தில் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
பெண் வீட்டாரே மாப்பிள்ளை கேட்டுச் செல்லும் வழக்கம் உள்ளது. திருமணத்தின் முக்கியச் சடங்குகள் அனைத்தும் மணமகள் இல்லத்திலேயே நடைபெறுகின்றன. மணமகனை யானை மீது ஏற்றி ஊர்வலமாகக் கூட்டி வருவது இன்றும் சில இடங்களில் தொடர்கிறது.
தென்னவன், கேளரன், திருவெம்பு, திருமால், கன்றெறிந்தான், நாராயணன், காங்கேயன், காளியார் என எட்டு முக்கியக் கிளைகள் இச்சமூகத்தில் உள்ளன. ஒரே கிளையைச் சேர்ந்தவர்கள் ரத்த உறவுகளாகக் கருதப்படுவதால், மாற்றுப் பிரிவினரிடையே மட்டுமே திருமணம் நடைபெறுகிறது. முற்காலத்தில் ஒரு கணவன் தன் மனைவியிடம் தகராறு செய்தபோது, “இது உன் வீடு அல்ல” எனக் கூறி தாலியைப் பறித்த ஒரு கசப்பான சம்பவமே இந்த மாற்றத்திற்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, ஒரு பெண்ணிற்குத் தன் சொந்த வீடும், சொத்தும் இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வோடு இந்தப் புதிய கலாச்சாரம் உருவானது. பெண்ணுரிமை மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த நடைமுறை, இன்றைய நவீன காலத்திற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

















