சென்னையில் இஸ்லாமியப் பெரியவர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, சுமார் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாகூர் தர்கா ஆதினம் செய்யது முகமது கலிபா சாகிப் நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும், ஆதினமுமான செய்யது முகமது கலிபா சாகிப் இது குறித்துக் கூறுகையில்: தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி, இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஹஜ் இல்லத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், விமானம் ஏறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்னை வந்து தங்க வேண்டிய சூழல் உள்ளது. தங்குவதற்குச் சரியான வசதி இல்லாததால் பயணிகள் இதுவரை பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
சென்னை விமான நிலையத்திற்கு மிக அருகிலேயே இந்த ஹஜ் இல்லம் அமைய உள்ளது பயணிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும். இந்த புதிய ஹஜ் இல்லம் வெறும் தங்கும் இடமாக மட்டுமல்லாமல், பல்வேறு நவீன வசதிகளுடன் அமைய உள்ளது ஹஜ் பயணிகளுக்குத் தேவையான பயிற்சிகள், ஆவணச் சரிபார்ப்பு மற்றும் தங்குவதற்குப் போதுமான அறைகள் இதில் இடம்பெறும். இதற்காகத் தமிழக அரசு ரூ.39.20 கோடி நிதியை ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.
நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும், ஆதினமுமான செய்யது முகமது கலிபா சாகிப் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது: “சென்னை விமான நிலையம் அருகில் ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நிறைவேற்றியுள்ளார். இந்தத் திட்டம் பயணிகளின் நீண்டகால சிரமத்தைப் போக்கும் என்பதால், இதனை ஒவ்வொரு இஸ்லாமியரும் மனமாற வரவேற்கிறோம்.” இந்த இல்லம் கட்டி முடிக்கப்பட்ட பின், ஆண்டுதோறும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

















