பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து மாரியாதை

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களின் சமூகப் பங்களிப்பைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய பிரம்மாண்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.01.2026) நேரில் திறந்து வைத்தார். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தைத் திறந்து வைத்த பின்னர், அங்கு நிறுவப்பட்டுள்ள தியாகியின் உருவப் படத்திற்கு மலர் தூவி முதல்வர் தனது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்தினார். கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அவரது நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார், 1924-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூர் கிராமத்தில் பிறந்தார். தனது 18-வது வயதிலேயே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து, 1942-ம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகவும், சமத்துவத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது சமூக நீதி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பரமக்குடி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், அனைத்து நவீன வசதிகளுடனும் கூடிய கலைநயமிக்க கட்டடமாக இந்த மணிமண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்த தியாகிகளை கௌரவிப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறது. சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார் இழுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க செக்கு பொலிவூட்டப்பட்டு, அங்கு அவரது மார்பளவு சிலை நிறுவப்பட்டது முதல், கோயம்புத்தூரில் வ.உ.சி. முழு உருவச் சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் அமைத்தது வரை பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சமூக சீர்திருத்தத்திற்காகப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் போன்ற பெண் ஆளுமைகளுக்கும் சிலைகள் நிறுவி, மணிமண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழைத் தமிழக அரசு தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வாரிசுகள் திரளாகக் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தைத் திறந்து வைத்த பின் அங்குள்ள கல்வெட்டுகளைப் பார்வையிட்ட முதல்வர், தியாகியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்த மணிமண்டபம் எதிர்காலச் சந்ததியினர் தியாகி இமானுவேல் சேகரனாரின் வீரத்தையும், அவர் முன்னெடுத்த சமூக நீதிக் கருத்துகளையும் அறிந்து கொள்வதற்கான ஒரு சிறந்த இடமாகத் திகழும் என விழாவில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Exit mobile version