திருவள்ளூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மீது இந்த கொடூரம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளியை பிடிக்க மாவட்ட காவல்துறையினர் 14 நாட்களாக 18-க்கும் மேற்பட்ட சிறப்பு விசாரணைப் படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவரை கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தொடர்ச்சியாக 12 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரித்தனர்.
விசாரணையின் போது, கைதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், சம்பவம் நடந்த நாளில் நடந்த பல விவரங்களையும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் இந்தி மட்டுமே பேசக்கூடியவர் என்பதும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மட்டும் ரயில்களில் பயணித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி குறிப்பிட்ட அடையாளங்களில் — உடைந்த பற்கள், இடது கையில் டேட்டூ, வலது கையில் பச்சை கயிறு, பான்பராக் புகை பழக்கம் மற்றும் உடையில் ரத்தக் கறைகள் — ஆகியவை அனைத்தும் அந்த இளைஞரிடம் உறுதிப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைதான நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.