தொண்டாமுத்தூர் ஒன்றியம், தீத்திபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தார்சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. தாமோதரன் தலைமை தாங்கி, பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம், தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம் மற்றும் மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஸ்ரீதர், பத்மநாபன், கர்ணன், மாணிக்கராஜ், பாக்கியராஜ், நாகராஜ், பொறியாளர் ராமராஜ், தேவராஜ், ஆர்.வி.எஸ். பில்டர்ஸ் ராமசாமி மற்றும் ஊராட்சி செயலாளர் நாகராஜ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
தார்சாலை அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கி வைத்ததற்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், பாண்டுரங்கன், முத்துக்குமார் ஆகியோர் எம்.எல்.ஏ. தாமோதரனுக்குப் பொன்னாடை அணிவித்துத் தங்களது நன்றியையும், வாழ்த்துகளையும்த் தெரிவித்துக் கொண்டனர். இந்த புதிய தார்சாலை அமைப்பதன் மூலம் இப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பல காலப் போக்குவரத்துப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
