கோவை மாநகரின் அடையாளமாகவும், முருகப் பெருமானின் ஏழாம் படைவீடு எனப் போற்றப்படுவதுமான மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, நவீன லிப்ட் (மின்தூக்கி) அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சுமார் 5.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டம், பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது பயன்பாட்டிற்குத் தயாராகி வருவது பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் ராஜகோபுரத்தின் வலது புறத்தில், இரண்டு நிலைகளில் (Two Levels) இந்த லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலே செல்வதற்கு இரண்டு லிப்ட்டுகளும், கீழே இறங்குவதற்கு இரண்டு லிப்ட்டுகளும் என மொத்தம் நான்கு மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக இந்தப் பணியைத் தொடங்கி வைத்தார். எனினும், மருதமலை ஒரு மலைக்கோவில் என்பதால், கட்டுமானப் பணியின் போது கடினமான பாறைகள் பெரும் சவாலாக அமைந்தன. பாறைகளை உடைக்க வெடிபொருட்களைப் பயன்படுத்தினால் கோவில் கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், ‘ஆசிட்’ ஊற்றிப் பாறைகளை மெதுவாகக் கரைத்து உடைக்கும் நவீன முறை கையாளப்பட்டது. இதனால் ஆரம்பகட்டப் பணிகளில் சற்றுத் தாமதம் ஏற்பட்டது.
மேலும், கட்டுமானத்தின் போது இரண்டாம் தளத்தின் உயரத்தில் சில மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், அதற்கேற்ப புதிய வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தற்போது முதல் தளத்திற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இரண்டாம் தளப் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் இழுபறியாக இருந்த இந்தப் பணி, வரும் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி பயன்பாட்டிற்கு வருமா என்ற பலத்த எதிர்பார்ப்பு பக்தர்களிடையே நிலவுகிறது.
இது குறித்துக் கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் கூறுகையில், “லிப்ட் அமைக்கும் பணிகள் அனைத்தும் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளன. சோதனை ஓட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ்கள் பெறும் நடைமுறைகள் முடிந்ததும், வரும் ஜனவரி மாதத்தில் இந்த வசதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். திறப்பு விழா குறித்த அதிகாரப்பூர்வத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்,” என்று தெரிவித்தார். இதன் மூலம், இனிவரும் காலங்களில் படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல இயலாத முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் எவ்வித சிரமமுமின்றி மருதமலை முருகனைத் தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
















