கரூர் – திண்டுக்கல் இடையேயான காவிரி குடிநீர் குழாய் பாதையில், முறையாகப் புதுப்பிக்கப்பட்ட ஏர்வால்வு தொட்டிகள் மூடப்படாமல் திறந்த நிலையில் கிடப்பதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிப் பலத்த காயமடையும் அவலம் நீடிக்கிறது.
கரூர் மாவட்டம் கட்டளை காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், வெள்ளியணை, டி.கூடலூர், பாளையம், குஜிலியம்பாறை மற்றும் கோவிலூர் வழியாகக் குடிநீர் கொண்டு செல்ல ஆங்காங்கே ராட்சதத் தொட்டிகளும், குழாய்களில் ஏற்படும் காற்றழுத்தத்தைச் சரிசெய்ய ஏர்வால்வுகளும் (Air Valves) அமைக்கப்பட்டன.
அண்மையில், இந்தப் பாதையில் சிதிலமடைந்திருந்த ஏர்வால்வு தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, புதிய சிமெண்ட் தொட்டிகளாகப் புதுப்பிக்கப்பட்டன. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், தொட்டிகளைச் சுற்றித் தோண்டப்பட்ட பள்ளங்களை மண் கொண்டு மூடாமலும், தொட்டியின் மேற்பகுதிக்குச் சிமெண்ட் மூடி அமைக்காமலும் அதிகாரிகள் மெத்தனமாக விட்டுள்ளனர்.
குறிப்பாக, கோவிலூர் அருகே தோகமலை கோட்டை, சக்தி நகர், பாலத்தாறு மற்றும் வடுகம்பாடி பிரிவு சாலை போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், சாலையோரத்திலேயே இந்தத் தொட்டிகள் திறந்த நிலையில் கிடக்கின்றன. தற்போது திண்டுக்கல் – குஜிலியம்பாறை – கரூர் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால், வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண் மேட்டில் ஏறி நிலைதடுமாறிப் பள்ளங்களுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இது குறித்து கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர். ஜெகன் கூறுகையில், “சக்தி நகர் பகுதியில் உள்ள ஏர்வால்வு தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதமாகிறது. இதற்கான சிமெண்ட் மூடி பலகையை அருகிலேயே செய்து வைத்துள்ளனர். ஆனால், அதனை எடுத்துத் தொட்டியை மூடுவதற்கு ஆட்கள் வரவில்லை. சாலையோரம் பள்ளமாகவும், சாலையில் மண் குவியலாகவும் கிடப்பதால், கடந்த வாரம் ஒரு வாகன ஓட்டி கீழே விழுந்து தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. உயிர்ப்பலி ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வேதனையுடன் தெரிவித்தார்.
மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரைக் கொண்டு செல்லும் திட்டமானது, முறையாகப் பராமரிக்கப்படாததால் தற்போது உயிரைப் பறிக்கும் அபாயமாக மாறியுள்ளது. எனவே, காவிரி குடிநீர் திட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, விபத்துக்களைத் தடுக்க ஏர்வால்வு தொட்டிகளை மூடி, சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













