தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராஜதானியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்னை டோரா நர்சிங் கல்லூரியில், 2025 — 2026-ஆம் கல்வி ஆண்டின் புதிய பி.எஸ்சி., நர்சிங் மாணவிகளை வரவேற்கும் விதமாகவும், செவிலியர் பணியின் புனிதத்தைப் போற்றும் விதமாகவும் ‘லேம்ப் லைட்’ (Lamp Lighting Ceremony) மற்றும் உறுதிமொழி ஏற்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. மருத்துவ உலகின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக நடைபெறும் இந்த விழாவில், புதிய மாணவிகள் கைகளில் தீபம் ஏந்தி, மனித நேயத்துடன் நோயாளிகளுக்குச் சேவை செய்வோம் என உறுதி பூண்டனர். விழாவிற்குத் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) கலைக்கதிரவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரிச் செயலாளர் பேராசிரியர் லட்சுமணன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் சுதாமகேஸ்வரி செவிலியர் பணிக்கான புனித உறுதிமொழி ஏற்பு நிகழ்வை முன்னின்று நடத்தினார். அப்போது மாணவிகள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவச் சேவையாற்ற உறுதி ஏற்றனர். செவிலியர் படிப்பு என்பது வெறும் கல்வி மட்டுமல்ல, அது உயிர் காக்கும் உன்னதப் பணி என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. விழாவின் ஒரு பகுதியாக மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மருதை, அர்ஜூனன், ராதாகிருஷ்ணன், வஜ்ரவேல், சம்பத், மீனாட்சிசுந்தரம் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் எனப் பலர் திரளாகக் கலந்து கொண்டனர். நர்சிங் கல்வியில் கால்பதிக்கும் முதலாண்டு மாணவிகளுக்கு இந்த ‘லேம்ப் லைட்டிங்’ விழா ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்தது.

















