கொடைக்கானலின் அடையாளமான குறிஞ்சித் தோட்டம் பராமரிப்பின்றி அழிவு  புதர் மண்டி கிடக்கும் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உலகப் புகழ்பெற்ற அபூர்வ வகை குறிஞ்சி மலர்களைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட பிரத்யேகத் தோட்டம், தற்போது முறையான பராமரிப்பின்றி அழியும் நிலையில் இருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கொடைக்கானலின் முக்கியச் சுற்றுலாத் தலமான கோக்கர்ஸ் வாக் பகுதியில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வினய் அவர்களின் சிறப்புக் கவனத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த நேர்த்தியான குறிஞ்சித் தோட்டம் அமைக்கப்பட்டது. இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பூங்கா, குறிஞ்சி மலர்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதோடு, அதன் சிறப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு கல்வி மையமாகவும் திகழ்ந்தது.

தோட்டம் அமைக்கப்பட்ட தொடக்கக் காலத்தில், அங்கு பூத்துக் குலுங்கிய நீல நிறக் குறிஞ்சி மலர்களைக் கண்டு ரசிக்க உலகெங்கிலும் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். குறிப்பாக, கொடைக்கானல் பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இது ஒரு நேரடித் தாவரவியல் ஆய்வு மையமாகவே விளங்கியது. ஆனால், காலப்போக்கில் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் இத்தோட்டம் தனது பொலிவை இழந்துள்ளது. தற்போது பூங்கா முழுவதும் ஆள் உயரத்திற்குப் புல் புதர்கள் மண்டிச் சேதமடைந்து காணப்படுகிறது. பூங்காவைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகள் சேதமடைந்துள்ளதால், உள்ளூர் ஆடு மாடுகள் பூங்காவிற்குள் புகுந்து அரிய வகைச் செடிகளை மேய்ந்து அழித்து வருகின்றன.

குறிஞ்சி மலர்கள் கடைசியாக 2018-ல் பூத்த நிலையில், சுழற்சி முறையில் மீண்டும் 2030-ஆம் ஆண்டு பூக்கவுள்ளன. இதற்காகப் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் பூங்காக்களில் குறிஞ்சிச் செடிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், குறிஞ்சித் தோட்டம் என்றே பெயரிட்டு உருவாக்கப்பட்ட இந்த அரசுப் பூங்கா, தற்போது அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து கிடப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அரிய வகை இயற்கைச் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், நிதி ஒதுக்கீடு செய்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுவது வேதனையளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வரும் ஆண்டுகளில் குறிஞ்சி மலர்கள் மீண்டும் பூக்க உள்ளதைக் கருத்தில் கொண்டு, உடனடியாகப் புதர்களை அகற்றி, வேலிகளைச் சீரமைத்து, இத்தோட்டத்திற்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒருமித்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version