திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ரயில் நிலையத்தில், ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தண்டவாளக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘பாயிண்ட்’ (Point) கட்டமைப்பு அமைக்கும் பணி இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. விழுப்புரம் – திண்டுக்கல் இடையிலான இருவழி ரயில் பாதை பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டு முழுமையடைந்தது. அப்போது அமைக்கப்பட்ட புதிய பாதைகளில் ஒரு மீட்டர் நீளம் 60 கிலோ எடை கொண்ட ’60 கேஜி’ தண்டவாளங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு முன்னதாக 52 கிலோ எடை கொண்ட தண்டவாளங்களே பயன்பாட்டில் இருந்த நிலையில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், அதிக பாரம் சுமந்து செல்லும் திறனை வலுப்படுத்தவும் இந்த மேம்பட்ட தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன.
தற்போது இந்தப் பாதையில் பாதுகாப்பை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில், அய்யலூர் பகுதியில் புதிய தொழில்நுட்பத்திலான ‘பாயிண்ட்’ கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. ரயில்வே தொழில்நுட்பத்தில் ‘பாயிண்ட்’ என்பது ரயில்கள் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்குத் தடம் மாறும் முக்கியமான சந்திப்புப் பகுதியாகும். அதிவேகமாக ரயில்கள் செல்லும்போது இந்தப் பகுதிகளில் அதிர்வு மற்றும் தேய்மானம் ஏற்படாமல் இருக்க, மிகவும் வலிமையான 60 கேஜி தரத்திலான புதிய கட்டமைப்பைப் பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இந்தப் பணியானது மிகத் துல்லியமான திட்டமிடலுடன், நவீன இயந்திரங்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கட்டுமானப் பணியின் போது, தண்டவாளத்திலும் அதே சமயம் தரைப்பகுதியிலும் எளிதாகச் செல்லக்கூடிய இரண்டு ராட்சத கிரேன்கள், டிராலிகள் மற்றும் மண் தள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 650 மீட்டர் தூரத்திற்கு முன்பே தயார் செய்யப்பட்டிருந்த இந்தப் புதிய ‘பாயிண்ட்’ கட்டமைப்பு, தண்டவாளத்தின் வழியாகவே மிகக் கவனமாகக் கொண்டு வரப்பட்டு, உரிய இடத்தில் கச்சிதமாகப் பொருத்தப்பட்டது. இந்தப் புதிய நவீன பாதுகாப்பு அம்சம் கொண்ட கட்டமைப்பினால், ரயில்கள் தடம் மாறும்போது ஏற்படும் உராய்வு குறைக்கப்படுவதோடு, ரயில்களின் பயண நேரம் குறையவும், பாதுகாப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் வகையில் தென்னக ரயில்வே மேற்கொண்டு வரும் இந்தத் தண்டவாளம் பலப்படுத்தும் பணிகளை ரயில்வே உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்தப் பணி நடைபெற்ற காலங்களில் சில ரயில்களின் இயக்கம் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டிருந்தது. பணி நிறைவடைந்த பின், தண்டவாளத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து சீரானது. அய்யலூர் ரயில் நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொழில்நுட்ப மேம்பாடு, திண்டுக்கல் – திருச்சி வழித்தடத்தில் ரயில் சேவையை மேம்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
