மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடியை அதிகாரிகள் அகற்றியது தொடர்பாக, தர்கா நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் மலையில் நிலவும் இந்த எல்லை விவகாரம், தற்போது சட்ட ரீதியான மோதலாக உருவெடுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் வருடாந்திர சந்தனக்கூடு விழாவையொட்டி, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தர்கா அருகே உள்ள கல்லத்தி மரத்தில் பாரம்பரிய முறைப்படி கொடி ஏற்றப்பட்டது. இருப்பினும், அந்தக் குறிப்பிட்ட கல்லத்தி மரம் அமைந்துள்ள பகுதி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்று கோயில் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த எல்லைச் சிக்கல் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்ட நிலையில், நீதிமன்றம் இது குறித்து விளக்கம் கோரியதோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறிக் கொடியேற்றியதாகத் தர்கா தரப்பினர் மீது திருப்பரங்குன்றம் போலீஸார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நிலமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய கூட்டுக் குழுவினர் மலை மீது ஏறி, கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை அகற்றினர். பலத்த பாதுகாப்புடன் நள்ளிரவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தர்கா நிர்வாகத்தினர், நேற்று திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், “கல்லத்தி மரத்தில் கொடியேற்றிய விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தங்களுக்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி கொடியை அகற்றியது முறையற்றது; எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைப் பகுதி தொல்லியல் துறை, வனத்துறை, அறநிலையத்துறை மற்றும் தர்கா நிர்வாகம் எனப் பல அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது என்பதால், நீண்டகாலமாக நிலவும் இந்த எல்லைப் பகிர்வு தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட மாவட்ட நிர்வாகம் முற்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கொடி அகற்றப்பட்ட விவகாரத்தால் மலைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.














