கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மருங்கூரை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட உயர்ரக வெளிநாட்டு வகை போதைப்பொருட்கள் சப்ளை செய்யப்பட்டது தொடர்பாக, உளவுப்பிரிவு போலீசார் தீவிர ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கும் இந்த போதைப்பொருட்கள் சப்ளை நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக, குலசேகரத்தைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (34), அவரது மனைவி சவுமி (33), சகோதரர் கோவிந்த் கிருஷ்ணா (27) மற்றும் ரிசார்ட் உரிமையாளர் ராஜூ (64) உட்பட மொத்தம் 8 பேரை அஞ்சுகிராமம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கோகுல் கிருஷ்ணன் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். நாளுக்கு நாள் இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கைதாகியுள்ள கோகுல் கிருஷ்ணனுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுடன் நேரடித் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் மூலம், இவர் பல்வேறு ரிசார்ட்டுகளில் கலை விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்து, பலரையும் வரவழைத்து போதைப் பொருட்களை சப்ளை செய்திருக்கலாம் என்று காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. கொண்டாட்டம் நடந்த ரிசார்ட்டுக்குத் தற்போது வரை வெளிநாட்டினர் பலர் வந்த வண்ணம் உள்ளதால், அந்த ரிசார்ட்டைப் போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து உயர் ரக போதைப்பொருட்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தது, யார் கொண்டு வந்தார்கள், விமான நிலையச் சோதனைகளில் சிக்காமல் இது கடத்தப்பட்டது எப்படி போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, புரோக்கராகச் செயல்பட்ட முக்கிய புள்ளிகள் யார், விமான நிலைய அதிகாரிகள் உடந்தையுடன் போதைப்பொருள் சப்ளை நடந்திருக்குமா? என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்த விவகாரத்தின் ஆழத்தை அறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கோகுல் கிருஷ்ணனுடன் நெருக்கமாக இருக்கும் நபர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள தொழிலதிபர்கள், முக்கிய புள்ளிகளுடன் கோகுல் கிருஷ்ணன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை நீளும் எனத் தெரிகிறது. அவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை நடந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த அன்று ரிசார்ட்டில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். போலீசார் குறைந்த எண்ணிக்கையில் சென்றதால் பலர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களையும் சேகரிக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
