இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் மேற்கு வங்க வருகையின் போது ஏற்பட்ட அடுத்தடுத்த கசப்பான சம்பவங்கள், தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன. மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஜனாதிபதியை வரவேற்க, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ அல்லது அவர் சார்பிலான அமைச்சர்களோ செல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, போதிய இடவசதி கொண்ட ‘பிதாநகர்’ பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, கடைசி நேரத்தில் பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள குறுகலான ‘கோஷாய்பூர்’ பகுதிக்கு மாற்றப்பட்டது. மாநில அரசின் இந்தத் திடீர் இடமாற்றத்தால், ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் திரள வேண்டிய நிகழ்வில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே பங்கேற்க முடிந்தது, இது திரிணமூல் காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி எனப் பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
நிகழ்ச்சியில் மேடையேறிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, வழக்கத்திற்கு மாறாகத் தனது உரையில் மாநில அரசின் போக்கை நேரடியாகச் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்தார். “ஜனாதிபதி ஒரு மாநிலத்திற்கு வரும்போது முதலமைச்சர் நேரில் வந்து வரவேற்பதே மரபு. ஆனால் மம்தா பானர்ஜி வரவில்லை; ஆளுநரும் மாற்றப்பட்டிருப்பதால் அவரும் இல்லை. பிதாநகரில் நிகழ்ச்சி நடந்திருந்தால் மக்கள் பெருமளவில் பங்கேற்றிருக்க முடியும். மாநில அரசு அங்கு அனுமதி மறுத்தது ஏன் எனத் தெரியவில்லை. பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடையக் கூடாது என அரசு நினைக்கிறதா? மம்தா எனது இளைய சகோதரி போன்றவர், நானும் இந்த வங்க மண்ணின் புதல்விதான். என்னை இங்கு வர அனுமதிப்பதில் அவருக்கு என்ன குழப்பம் அல்லது கவலை என்று புரியவில்லை” என வெளிப்படையாகப் பேசினார். இதற்குப் பதிலடியாக, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டபோது ஜனாதிபதி மௌனம் காத்தது ஏன் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், அதன் மாண்பு எப்போதுமே மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் அரசு எல்லைகளை மீறிச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி அவமதிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தேசத்திற்கும் வெட்கக்கேடானது என்றார். பழங்குடியினச் சமூகப் பின்புலத்திலிருந்து உயரிய பதவிக்கு வந்துள்ள ஒரு பெண் தலைவரை மாநில நிர்வாகம் கையாண்ட விதம், சமூக முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரையும் மனம் நோகச் செய்துள்ளதாகப் பிரதமர் சாடினார். ஜனாதிபதி வெளிப்படுத்தியிருக்கும் இந்தத் தனிப்பட்ட வேதனை இந்திய மக்களின் மனங்களில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், அரசியல் மாண்புகளைக் காக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என நினைவூட்டினார்.
