திருச்செந்தூர் :
தமிழ் இனத்தின் காவலர் என்றும், அறுபடை வீடுகளில் இரண்டாவது புனித ஸ்தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழைக்குப் பின்னர், கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வேலைகள் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த புனிதநாளுக்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாகவே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
விழா நாளின் சிறப்பம்சங்கள் :
ஜூலை 7ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீபாராதனை, பூர்ணாகுதி நடைபெற்றது. பக்தர்களின் “அரோகரா” கோஷம் முழங்க, புனித நீர் ஊற்றிய “கடம்” கோவிலின் மேற்கு வாசல் வழியாக ராஜகோபுரத்திற்குச் செல்லப்பட்டது.
அங்கு அமைக்கப்பட்ட 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, சரியாக அதிகாலை 6.50 மணிக்கு குடமுழுக்கு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நிறைவு பெற்றது. அதன்பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. “கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா” என பக்தர்கள் முழக்கம் முழுமையடைந்தது.
பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் :
இந்த நிகழ்வுக்காக 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் மேற்கு கோபுரம் அருகே, 8,000 சதுர அடியில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு :
விழா நிறைவில், கடற்கரை பகுதியில் தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 ராட்சத ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் மூன்று முறை தெளிக்கப்பட்டது. இது அனைவருக்கும் புதிய அனுபவமாக அமைந்தது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகனுக்கான குடமுழுக்கு விழா மிகுந்த பக்திபூர்வமும், சிறப்புமாக நடைபெற்றது. “முருகனுக்கு அரோகரா, தமிழ்க்கடவுளுக்கு அரோகரா” என பக்தர்களின் முழக்கம் விண்ணை பிளந்தது.