உசிலம்பட்டியில் மண்ணில் புதைந்து வரும் வீர வரலாறுகள்: ‘வளரி’ நடுகற்களைப் பாதுகாக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், சங்க காலம் தொட்டு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்து வருகின்றன. போர்முனையில் வீரமரணம் அடைந்த வீரர்கள், மக்களை அச்சுறுத்திய புலிகளைக் கொன்று உயிர்நீத்தோர் மற்றும் சமூகத்தைக் காக்கத் தன்னுயிர் ஈந்த முன்னோர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஏராளமான ‘நடுகற்கள்’ இப்பகுதி கிராமங்களில் பரவிக் கிடக்கின்றன. இந்த நடுகற்கள் வெறும் கற்கள் மட்டுமல்ல; அவை அக்கால மனிதர்களின் உடலமைப்பு, அவர்கள் பயன்படுத்திய தனித்துவமான ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வரலாற்று ஆவணங்களாகும். குறிப்பாக, தமிழர்களின் பாரம்பரிய ஆயுதமான ‘வளரி’யுடன் கூடிய நடுகற்கள் உசிலம்பட்டி பகுதியில் பரவலாகக் காணப்படுவது வரலாற்று ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் செல்லம்பட்டி – திடியன் சாலையில் உள்ள வலங்காகுளம் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில் அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கு கண்டறியப்பட்ட ஒரு நடுகல்லில், வீரன் ஒருவன் கையில் வாளுடனும், இடையில் குறுவாள் மற்றும் இடது பக்கம் ‘வளரி’ ஆயுதத்துடனும் காட்சியளிக்கிறான். அவனது அருகில் ஒரு பெண் தண்ணீர் குடுவையுடன் நிற்கும் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இவரை ‘பட்டவன்சாமி’ (மக்களுக்காகப் பட்டுப்போனவர்/உயிர்நீத்தவர்) என்று அழைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். ஆனால், காலப்போக்கில் முறையான பராமரிப்பு மற்றும் வழிபாடு இல்லாததால், இந்த அரிய நடுகல் தற்போது பாதியளவு மண்ணில் புதைந்து சிதையும் நிலையில் உள்ளது.

இதற்கு அருகாமையிலேயே உள்ள ஒரு பழைய கிணற்றின் சுவரில் தலைவன் – தலைவி நின்றிருப்பது போன்ற சிற்பமும், அதன் கீழே பழங்கால எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்திய கிணற்றின் அருகே, இரண்டு பெண்கள் மலர்ச்செண்டுடன் இருப்பது போன்ற சிற்பம் கொண்ட நடுகல் உடைந்து மண்ணில் புதைந்து கிடக்கிறது. ஜல்லிக்கட்டில் வீரமரணமடைந்த வீரர்கள், விவசாயப் பணியில் ஈடுபட்டோர் எனப் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பறைசாற்றும் இந்தச் சின்னங்கள் இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

உசிலம்பட்டி பகுதியில் நெடுங்கல் வழிபாட்டு முறை தொடர்ந்து வந்தாலும், வழிபாட்டில் விடுபட்ட கற்கள் வேகமாக அழிந்து வருகின்றன. முன்னோர்களின் வீரத்தையும், தமிழர்களின் தற்காப்புக் கலைகளையும் பறைசாற்றும் இந்த நடுகற்களை ஆவணப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் தலையிட்டு, உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுத்து, அவற்றின் பின்னணி வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும். மேலும், இவை மண்ணில் புதைந்து மறைந்துவிடாதபடி வேலி அமைத்துப் பாதுகாப்பதோடு, தொல்லியல் துறையின் உதவியுடன் இவற்றைச் சீரமைக்க முன்வர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version