மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் பயணிகளின் முதல் தேர்வாகத் திகழும் அரசு தாவரவியல் பூங்கா, தற்போது கோடைக்கால முதல் சீசனுக்காக (First Season) தயாராகி வருகிறது. பூங்காவின் திறந்தவெளிப் பகுதிகளில் மலர் பாத்திகள் சீரமைக்கப்பட்டு, மலர் தொட்டிகளில் செம்மண் மற்றும் எரு நிரப்பும் பணிகளும், புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகப் பூங்காவின் வெளிப்பகுதிகள் மலர்களின்றிச் சற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இருப்பினும், சுற்றுலா பயணிகளை ஏமாற்றாத வகையில் பூங்காவில் உள்ள பிரம்மாண்டக் கண்ணாடி மாளிகையில் (Glass House) வண்ணமயமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கண்ணாடி மாளிகையின் நுழைவாயில் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ‘ஆந்தூரியம்’ (Anthurium) மலர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. பசுமைக்குடில் மற்றும் கண்ணாடி மாளிகை போன்ற இதமான சீதோஷ்ண நிலையில் வளரக்கூடிய இந்த மலர்கள், தற்போது ஊட்டி பூங்காவில் சிவப்பு, இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த மலரின் இதழ்கள் பார்ப்பதற்கு அச்சு அசலாக ‘இதய’ வடிவில் காட்சியளிப்பதால், சுற்றுலா பயணிகள் இதனை மிகுந்த வியப்புடன் கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாகத் தம்பதியினர் மற்றும் இளைஞர்கள் இந்த இதய வடிவ மலர்களின் அருகே நின்று ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்களை எடுத்து மகிழ்கின்றனர். இது தவிரப் பசுமைக்குடிலில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு வெளிநாட்டு மலர் இனங்களும் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. திறந்தவெளிப் பகுதிகளில் மலர்கள் இல்லாத குறையை இந்தக் கண்ணாடி மாளிகை அலங்காரங்கள் போக்கி வருவதாகச் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள கோடை விழாவிற்கு முன்னோட்டமாக, இந்த மலர் அலங்காரங்கள் பூங்காவிற்கு வரும் பயணிகளுக்கு நல்லதொரு விருந்தாக அமைந்துள்ளன.














