முழு பெளர்ணமியை முன்னிட்டு கொடைக்கானல் மலைப் பகுதியில் பிரகாசமாகத் தென்பட்ட முழு நிலவு

மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், மழைக் கால மேக மூட்டங்களுக்கு இடையே, பெளர்ணமி முழு நிலவு சிறிது நேரம் மட்டும் பிரகாசமாகக் காட்சியளித்த அரிய இயற்கை நிகழ்வை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று மாலை வரை மிதமான மழையும், சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வந்ததால், அப்பகுதியில் நிலப்பரப்பு முழுவதும் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. மலைப் பகுதியில் பெய்த மழையால் வானம் முழுவதும் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று பெளர்ணமி நாளாக இருந்ததால், முழு நிலவின் காட்சியைப் பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

மழை ஓய்ந்த பிறகு மாலை வேளையிலும் வானம் மேகமூட்டத்துடனேயே காட்சியளித்தது. இந்தச் சூழலில், பெளர்ணமியை முன்னிட்டு அவ்வப்போது மேகக் கூட்டங்கள் விலகியபோது, சிறிது நேரத்துக்கு மட்டும் முழு நிலா மலைப் பகுதியில் தென்பட்டது. மேகங்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்த நிலவு, எதிர்பாராதவிதமாக மிகவும் பிரகாசமாகவும், ஒரு வெள்ளை பந்து போன்றும் மிகவும் அழகாகக் காட்சியளித்தது.

மழையும், பனி மூட்டமும் நிறைந்த கொடைக்கானல் சூழலில், இவ்வாறு முழு நிலவு வெளிச்சத்துடன் சிறிது நேரம் மட்டும் காட்சியளித்தது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதைப் பார்த்த கொடைக்கானல் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அந்தப் பிரகாசமான முழு நிலவின் அழகைக் கண்டு வெகுவாக ரசித்தனர். மழை மற்றும் மேக மூட்டத்திற்குப் பின் கிடைத்த இந்தச் சந்திரன் தரிசனம், கொடைக்கானல் பகுதிக்கு மேலும் ஒரு வசீகர அழகைச் சேர்ப்பதாக அமைந்தது.

Exit mobile version