சென்னை : “நான் ஓய்வெடுக்கப்போவதில்லை; 2026-ல் மீண்டும் ஆட்சியமைக்க களம் தயார் ஆகிவிட்டது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, அவர் கூறியதாவது :
“கட்சி நிர்வாகிகளை சந்தித்து நேரடியாக பேசுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஆனாலும் எனக்கு சலிப்பு ஏற்படுவதில்லை. நாள்தோறும் திட்டங்களின் செயல்பாடுகளை நானே கண்காணித்து வருகிறேன். பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது.
தற்போது, பாஜக அரசு தேர்தல் கமிஷன் மூலம் பீகாரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்கூடாக பார்க்கிறோம். முதலீடுகளை ஈர்க்க, முன்பு போலவே வரும் செப்டம்பர் மாதத்திலும் வெளிநாடு செல்ல உள்ளேன். ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்துவருவேன்.
எங்கள் அரசின் நடவடிக்கைகள், தமிழக வளர்ச்சியை பிற முன்னேறிய நாடுகளுக்கு இணையாக உயர்த்தும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். நான் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை. நீங்கள் ஆற்றும் களப்பணியே நமது இலக்கை அடையும் முதல் படி. 2026-ல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது; முழு வீச்சில் செயல்படுவோம்” என அவர் உறுதியளித்தார்.