குழப்பத்திற்கு தீர்வு.. ராமதாஸ் புதுத்திட்டம்.. அன்புமணி மோதல் தீவிரம்

சென்னை : பாமகவில் தந்தை-மகன் அதிகார மோதல் மேலும் அதிகமாகி வருகிறது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையிலான தலைமைப் பிரச்சாரம், நீதிமன்றம் முதல் தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது.

முன்னதாக, வரும் 17ஆம் தேதி தனது தலைமையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு முந்தையதாக, அன்புமணியும் தனது தலைமையில் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை நடத்தி, தலைவர் பதவியில் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றினார்.

இதையடுத்து, அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என ராமதாஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “அன்புமணிக்கு தலைவர் பதவியில் நீடிக்கும் உரிமை இல்லை, தமக்குத் தாமே நிர்வாகத் தலைவராக அறிவித்தது சட்டப்படி செல்லாது” எனக் கூறப்பட்டது.

ஆனால், அன்புமணி அணியின் செய்தித் தொடர்பாளர் பாலு, “9ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுதான் சட்டபூர்வமானது. அதன் பிறகு எப்போது நடந்தாலும் அது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படாது. பொதுக்குழுவை நடத்தும் அதிகாரம் அன்புமணி ராமதாஸ்க்கே உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மாறாக, ராமதாஸ் தரப்பின் வழக்கறிஞரும் சமூக நீதி பேரவைத் தலைவருமான கோபு, “கட்சியை நிறுவியவர் ராமதாஸ்தான்; பொதுக்குழுவை நடத்துவதற்கு அவருக்கே அதிகாரம் உண்டு. 17ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்” என கூறினார்.

இதற்கிடையில், அன்புமணி தனது தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க, இரண்டு நாட்களில் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version