பாயும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்  சேலம் வழித்தட பயணிகளுக்குப் பாதுகாப்பு மற்றும் சொகுசுப் பயணம் உறுதி!

சேலம் ரயில்வே கோட்டத்தில் மிக முக்கியமான வழித்தடமான கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் மங்களூரு-சென்னை சென்ட்ரல்-மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அதிநவீன எல்.எச்.பி. (LHB) பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே துறையில் நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயணத்தின் தரத்தை மேம்படுத்தவும் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘லிங்க் ஹாப்மேன் புஷ்’ (Linke Hofmann Busch) பெட்டிகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் வழியாகச் செல்லும் இந்த முக்கிய ரயிலிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

புதிய அட்டவணைப்படி, மங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22638) வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் புதிய எல்.எச்.பி. பெட்டிகளுடன் தனது பயணத்தைத் தொடங்கும். அதேபோல், மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22637) வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் இந்த மாற்றத்தைப் பெறும். இந்த ரயிலானது மொத்தம் 22 அதிநவீன பெட்டிகளைக் கொண்டு இயங்கும். இதில் ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, ஐந்து மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், ஒன்பது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், நான்கு முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு லக்கேஜ் பெட்டி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இந்த எல்.எச்.பி. பெட்டிகளின் சிறப்பு அம்சங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “இந்த பெட்டிகள் மிக உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை. விபத்து காலங்களில் ஒன்றின் மேல் ஒன்று ஏறிச் செல்லாத வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய பெட்டிகளை விட இதில் கூடுதல் இருக்கைகள் உள்ளதால், அதிக அளவிலான பயணிகள் பயணிக்க முடியும். ரயிலை 160 கி.மீ வேகத்தில் இயக்கினாலும் பயணிகளுக்கு எவ்வித அதிர்வுகளும் தெரியாது. மேலும், டிஸ்க் பிரேக் வசதி, நவீன கழிவறைகள், தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதிகள் எனப் பயணிகளின் வசதிக்காகப் பல நவீன தொழில்நுட்பங்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தனர். இந்த மாற்றத்தின் மூலம் சென்னை – மங்களூரு இடையேயான நீண்ட தூரப் பயணம் இனி மிகவும் பாதுகாப்பானதாகவும், சொகுசானதாகவும் அமையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version