ஐயப்ப சுவாமிக்கு உகந்த புனித மாதமாகக் கருதப்படும் கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்துத் தங்களது 48 நாள் விரதத்தைத் தொடங்கினர். சபரிமலை தரிசனத்துக்காகச் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை திரளாக மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று, திண்டுக்கல் மலை அடிவாரம் ஐயப்பன் கோவிலில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
அதிகாலையிலேயே கோவில் நிர்வாகிகள் மற்றும் குருசாமிகள் இணைந்து ஐயப்ப சுவாமிக்குச் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். மேளதாளங்கள் முழங்க, ஐயப்பனின் வாகனமான புலியின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தைத் தொடர்ந்து, கோவிலில் அமைந்துள்ள கம்பத்தடி விநாயகர் முன்பு உள்ள கொடி மரத்தில், இந்த ஆண்டுக்கான கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வுக்குப் பிறகு, சபரிமலைக்குச் செல்ல விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் வரிசையாக நின்று, குருசாமிகளின் மூலம் மாலை அணிவித்துத் தங்கள் கடுமையான விரதத்தைத் தொடங்கினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கலந்துகொண்டு, பக்தியுடன் மாலைகளை அணிந்து கொண்டனர்.
மலை அடிவாரம் கோவில் மட்டுமின்றி, திண்டுக்கல் நகரிலுள்ள பிற கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்தனர். வெள்ளை விநாயகர் கோவில் இரயிலடி விநாயகர் கோவில் இந்திரா நகர் ஐயப்பன் கோவில் நாகல் நகர் சித்தி விநாயகர் கோவில் நந்தவனம் ரோடு ஐயப்பன் கோவில் இந்தக் கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் ‘சரண கோஷத்துடன்’ மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதல் அலைமோதியது.
விரதத்தைத் தொடங்குவதற்காக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மாலை, வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்களை வாங்கக் குவிந்தனர். இதனால், திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோவில் வீதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதுடன், வியாபாரமும் சூடுபிடித்தது. அடுத்த 48 நாட்களுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசிப்பார்கள். இந்த விரதக் காலம் முழுவதும், பக்திப் பாடல்கள் மற்றும் சரண கோஷத்துடன் திண்டுக்கல் நகரமே பக்திப் பரவசத்தில் மூழ்கியுள்ளது.
