மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் பெண் கல்வியை உறுதி செய்யவும், மாணவிகளின் இடைநிற்றலைத் தடுத்து உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கவும் தனி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக ஒலித்து வருகிறது. தமிழக அரசு பெண்கள் மேம்பாட்டிற்காகப் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், உசிலம்பட்டி நகரில் நிலவும் போதிய கல்வி உட்கட்டமைப்பு வசதியின்மை பெரும் முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது. தற்போது உசிலம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. பெண்கள் தனியாகப் பயில அரசுப் பள்ளி இல்லாதது, நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வி கற்பதில் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இதன் பின்னணி குறித்த வரலாற்று ரீதியான ஏக்கமும் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, உசிலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டபோது, காலியான அந்த பழைய கட்டிட வளாகத்தில் தனி அரசுப் பெண்கள் பள்ளி தொடங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக உசிலம்பட்டிக்கு ஒதுக்கப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிகமாக அந்தப் பழைய பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. இதனால் பெண்கள் பள்ளி கனவு அப்போதே கிடப்பில் போடப்பட்டது. அன்று தற்காலிகமாகத் தொடங்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி இன்று வரை அங்கேயே நீடிப்பதால், பெண்கள் பள்ளிக்கான இடவசதி கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக, 10-ஆம் வகுப்பு முடிக்கும் கிராமப்புற மாணவிகள், மேல்நிலைப்பள்ளி படிப்பிற்காகத் தொலைதூரம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்கள், தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வசதி இல்லாததாலும், பாதுகாப்புக் காரணங்களாலும் தங்களது பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிடுகின்றனர். இதுவே இப்பகுதியில் மாணவிகளின் இடைநிற்றல் அதிகரிக்க முக்கியக் காரணமாகிறது. மேலும், பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவிகள் உயர்கல்வி பயில அரசு கலைக் கல்லூரி இல்லாததால், மதுரை போன்ற நகரங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, பழைய ஆண்கள் பள்ளி வளாகத்தையோ அல்லது வேறு தகுந்த இடத்தையோ கண்டறிந்து, உடனடியாக அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரத்யேக அரசு மகளிர் கல்லூரியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
