“மக்களுக்கு கொடுத்த பொங்கல் பணத்தை டாஸ்மாக் மூலம் பிடுங்கிய திமுக”: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கிய ரொக்கப்பணம் மற்றும் அதே காலக்கட்டத்தில் நடைபெற்ற உச்சக்கட்ட மது விற்பனை குறித்துத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது கூட, தமிழக மக்களைப் போதையில் மூழ்கடிப்பதையே திமுக அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சாடியுள்ளார். “போதையில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிகள் வாயிலாக உருக்கமாகப் பேசிவிட்டு, அவரது ஆட்சியிலேயே பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ.518 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது ஒரு மிகப்பெரிய நகை முரண் என்று அவர் விமர்சித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில் சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்ற அவல நிலை உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், பண்டிகை காலங்களைத் டாஸ்மாக் விற்பனையை முடுக்கிவிடும் வாய்ப்பாகவே இந்த ‘திராவிட மாடல்’ அரசு பார்க்கிறது என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.3,000 வழங்கப்போவதாக ஊரெங்கும் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை அப்படியே டாஸ்மாக் கடைகள் வாயிலாகத் திரும்பப் பெற்றுக்கொண்ட திமுக அரசின் “அறிவாற்றலைப்” பார்க்கும்போது, “பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்ற புகழ்பெற்ற நகைச்சுவை வசனம்தான் நினைவுக்கு வருவதாக அவர் எள்ளி நகையாடினார். பொங்கலுக்கு அரசு வழங்கிய அதே ரூபாய் நோட்டுகள்தான் டாஸ்மாக் கல்லாவிற்குத் திரும்ப வந்துள்ளன என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உண்மையான மகிழ்ச்சி, குடும்ப நிம்மதி மற்றும் போதையால் ஏற்படும் சமூக அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட, மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தையே இந்த அரசு பெரிதாகக் கருதுகிறது. இத்தகைய மக்கள் நலனில் அக்கறையற்ற ஒரு அரசு, இனியொரு முறை தப்பித் தவறி கூடத் தமிழகத்தை ஆளக்கூடாது என்றும் அவர் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை காலத்தில் மதுவினால் நேர்ந்த உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், டாஸ்மாக் வருமானத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் அரசின் கொள்கை முடிவுகள் சமூகத்தைச் சீரழிப்பதாகக் கூறியுள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குத் திமுக தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version