மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள பாஜக-அதிமுக கூட்டணி மற்றும் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது குறித்து திமுகவினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், “திராவிட இயக்கமான நீங்கள் எப்படி அவர்களுடன் சேரலாம் என்று கேட்கிறார்கள்; நாங்கள் ஏதோ புதிதாகத் தப்பு செய்தது போலச் சித்தரிக்கிறார்கள். ஆனால், உண்மையாகவே பாஜகவுடன் முதலில் கூட்டணி வைத்து இந்தத் தவற்றைத் தொடங்கி வைத்ததே திமுகதான். அவர்கள் ஏற்கனவே பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்ததை மக்கள் மறக்கவில்லை,” என்று சாடினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள ‘ஆண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்’ என்ற திட்டத்தைப் பலமாக ஆதரித்துப் பேசினார். “ஆண்களிலும் எத்தனையோ வயதானவர்கள், ஏழை எளியவர்கள் உள்ளனர்; அவர்களால் எப்போதும் பணம் கொடுத்துப் பேருந்தில் செல்ல முடியாது. ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக என்பதால், அவர்களுக்காக இந்தச் சலுகையை அறிவித்துள்ளோம். ஜெயலலிதா காலத்தில் விலையில்லா அரிசி வழங்கியபோது பணக்காரர்களும் வாங்கிச் சென்றனர்; ஆனால், தேவைப்படுபவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுக ஆட்சியில் தற்போது தகுதி பார்த்துத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள், ஆனால் நாங்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்குவோம்,” என்று தெரிவித்தார். அதிமுகவின் இந்தத் தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டு திமுக தற்போது ஆட்டம் காணத் தொடங்கிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது மக்களுக்குப் பரிசுகளை அள்ளி வீசுவதைச் சுட்டிக்காட்டி, “மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்திருந்தால், இப்போது சீர்வரிசை கொடுப்பது போலப் பரிசுப் பொருட்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, சாதாரண கவுன்சிலராக இருந்த தன்னை அமைச்சராக்கி உலகறியச் செய்தது ஜெயலலிதா தான் என்றும், மீண்டும் மதுரை மேற்கு தொகுதி மக்களை நம்பிக் களம் காணத் தயாராக இருப்பதாகவும் கூறினார். மாவட்டச் செயலாளர் என்ற முறையில் நான்கு தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளதாகவும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடும் கட்டளைக்கு ஏற்ப எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடத் தயார் என்றும் அவர் தனது பேட்டியின் நிறைவாகத் தெரிவித்தார்.
